அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை!

அதிக ஒலி எழுப்பினால் சட்ட நடவடிக்கை! — பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

 

அதிகமான ஒலி மற்றும் ஒலி மாசுபாடு காரணமாக கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

⚖️ சட்டத்தை மீறினால் நடவடிக்கை

 

உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவுக்கு அமைவாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களை பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261ஆவது பிரிவின் கீழ் பொதுத் தொல்லையாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

 

எனினும், மத மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு உரிய விடயங்களை கருத்திற்கொண்டு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்படலாம்.

 

⏰ அனுமதி வழங்கப்பட்டால் பயன்படுத்தக்கூடிய நேரங்கள்

 

🔹 திங்கட்கிழமை – வியாழக்கிழமை: இரவு 10.00 மணி வரை

🔹 வெள்ளி – சனிக்கிழமை: அதிகாலை 1.00 மணி வரை

🔹 ஞாயிற்றுக்கிழமை: அதிகாலை 12.30 மணி வரை

 

⚠️ முக்கியம்: இந்த நேர வரையறைகள் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகக் கிடைக்கும் உரிமை அல்ல.

 

அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒலியின் அளவு சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் வகையில் பேணப்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

 

🚨 முறைப்பாடு கிடைத்தால் உடனடி நடவடிக்கை

 

அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளிலும் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

பொதுமக்கள் முறைப்பாடு செய்து, ஒலியினால் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அதிக ஒலியை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுவர்.

 

பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து அதிக ஒலியுடன் செயற்பட்டால், ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

 

📞 சட்டவிரோதமாக அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 118 / 119 அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

உங்கள் கொண்டாட்டம் மற்றொருவரின் அமைதியை பறிக்காதிருக்கட்டும்!

Recommended For You

About the Author: admin