நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு இரகசியமாகப் பிரித்தானியா சென்ற டிரம்ப்
– அச்சத்தால் சிறிய விமானத்திற்கு மாறியதாக தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இரகசியப் பயணம் குறித்த முக்கியத் தகவல்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் சென்ற மாதம் துருக்கியேவிலிருந்து இரகசியமாகச் சிறிய விமானத்தில் வெளியேறியதற்கு ஈரானிடமிருந்து வந்த கொ*லை மிரட்டலே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 8ஆம் தேதி துருக்கியே தலைநகர் அங்காராவில் டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ஏறினார்.
பின்னர், விமானத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கும் கலன் மூலம் அவர் சிறிய C-32A விமானத்திற்கு மாற்றப்பட்டு பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகப் பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், ஊடகங்களுக்கும் சில அதிகாரிகளுக்கும் அவர் வழக்கமான பெரிய விமானத்தில்தான் பயணம் செய்தது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே டிரம்ப் அங்காரா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்தப் பயணத்திற்கு கத்தார் நாடு அன்பளிப்பாக வழங்கிய புதிய போயிங் 747-8 (Boeing 747-8) விமானத்தைப் பயன்படுத்தியிருந்தார்.
பிரிட்டனில் உள்ள ஆகாயப்படைத் தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் புதிய விமானத்தைப் பார்வையிடுவதற்காகப் பழைய போயிங் 747 விமானத்தில் நாடு திரும்பப் போவதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
பழைய விமானத்தைப் போல புதிய விமானத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்று ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், வெள்ளை மாளிகை புதிய விமானத்தின் பாதுகாப்பைத் தற்காத்துப் பேசியுள்ளது.

