பிரான்சில் சத்திரசிகிச்சையின் போது தவறு!
தண்டுவடப் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு 2 இலட்சம் யூரோ இழப்பீடு!!!
பிரான்சின் வால்-து-மார்ன் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள பிசெட்ர் மருத்துவமனையில் (Hôpital Bicêtre), முதுகுத்தண்டு வளைவு (scoliose) நோய்க்கான சத்திரசிகிச்சையின் போது
ஏற்பட்ட பாரிய மருத்துவத் தவறால் நிரந்தர உடற்குறைபாட்டிற்கு ஆளான பெண்ணுக்கு, சுமார் இரண்டு இலட்சம் யூரோக்களை இழப்பீடாக வழங்குமாறு
பரிஸ் அரச மருத்துவமனைகள் கூட்டமைப்பிற்கு (AP-HP) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு பிறந்த இந்தப் பெண், 2018 ஜூலை 11 ஆம் திகதி முதுகுத்தண்டு வளைவைச் சீர்செய்வதற்கான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆனால், மயக்கம் தெளிந்ததும் அவரது வலது கால் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அன்றைய தினமே மீண்டும் அவசரச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
முதல் சத்திரசிகிச்சையின் போது முள்ளந்தண்டில் பொருத்தப்பட்ட திருகாணி (vis) ஒன்று சுமார் 45 பாகைகள் தவறான திசையில் செலுத்தப்பட்டு,
தண்டுவடக் கால்வாய்க்குள் (canal rachidien) ஊடுருவிப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ நிபுணர்களின் ஆய்வறிக்கையின்படி, திருகாணி பிழையாகப் பொருத்தப்பட்டமை ஒரு அப்பட்டமான “மருத்துவத் தவறு” (faute caractérisée) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சத்திரசிகிச்சைப் பிழையினால், அந்தப் பெண்ணின் கீழ் உடல் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவருக்கு 30 சதவீத நிரந்தரச் செயற்பாட்டுக் குறைபாடு (déficit fonctionnel permanent) ஏற்பட்டுள்ளது.
பயண முகவரகமொன்றில் (agence de voyages) குழுத் தலைவியாகப் பணியாற்றிய அவர், தற்போது வாரத்திற்கு 5 மணிநேரம் மற்றவர்களின் உதவியுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது தொழில் வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பரிஸ் நிர்வாக மேன்முறையீட்டு நீதிமன்றம் (cour administrative d’appel de Paris), கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், மருத்துவமனையின் (AP-HP) முழுமையான பொறுப்புக் கூறலை உறுதிசெய்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்தமாக 222,927.14 யூரோக்களை இழப்பீடாக மதிப்பிட்ட நீதிமன்றம், மருத்துவ விபத்துகளுக்கான இழப்பீட்டு நிறுவனத்தால் (Oniam) ஏற்கனவே முன்கூட்டியே வழங்கப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு,
எஞ்சிய 199,718.41 யூரோக்களை AP-HP வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தவிர, பாதிக்கப்பட்டவருக்கு ஆண்டுதோறும் 5,883 யூரோக்களை வாழ்நாள் உதவித்தொகையாகக் (rente annuelle) கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

