பிணவறைக் குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை மற்றும் நான்கு கருக்களின் உடலங்கள் மீட்பு!

தூலூஸ் போதனா மருத்துவமனையில் பேரதிர்ச்சி: பிணவறைக் குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை மற்றும் நான்கு கருக்களின் உடலங்கள் மீட்பு!

பிரான்சின் தூலூஸ் (Toulouse) நகரிலுள்ள ரங்குயில் (Rangueil) போதனா மருத்துவமனையின் (CHU) பிணவறையில் (chambre mortuaire) உள்ள மருத்துவக் கழிவுகள் அடங்கிய கொள்கலனொன்றிலிருந்து பிறந்த குழந்தையொன்றினதும், நான்கு கருக்களினதும் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 25) மாலை கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் மருத்துவத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் ஐந்து கருக்களின் உடலங்கள் மீட்கப்பட்டதாக மருத்துவமனை நிருவாகம் அறிவித்த போதிலும், பின்னர் அது ஒரு பச்சிளங்குழந்தை மற்றும் நான்கு கருக்கள் (nouveau-né et quatre fœtus) என்பது உறுதிப்படுத்தப்பட்டது. முதற்கட்டப் புலனாய்வுகள் மற்றும் சம்பவ இடத்தின் தடயங்களின் அடிப்படையில், இது மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் “தனிப்பட்ட செயலாக” இருக்கலாம் எனக் காவல்துறையினரால் ஐயப்படப்படுகிறது.

ஐயத்தின் பேரில் குறித்த மருத்துவ ஊழியர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மருத்துவமனை நிருவாகம் உள்ளக ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக அலுவல்முறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினருக்கும் பிராந்திய நலவாழ்வு முகவரகத்திற்கும் (ARS – Agence Régionale de Santé) உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அரச தரப்புச் சட்டத்தரணியின் (Procureur de la République) உத்தரவின் பேரில் சிறப்பு ஆய்வு மற்றும் புலனாய்வுப் பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ அறநெறிகளுக்கு எதிரான மீறல்

“அடக்கம் செய்யப்படுவதற்காக அல்லது தகனம் செய்யப்படுவதற்காகக் காத்திருக்கும் உடலங்களைக் கையாளுவதில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளுக்கும், மருத்துவ அறநெறி விதிகளுக்கும் (principes éthiques) முற்றிலும் முரணான வகையிலேயே இந்தக் கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது” என மருத்துவமனையும் பிராந்திய நலவாழ்வு முகவரகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin