தாய்லாந்தில் கனமழை: தலைநகர் பாங்காக்கில் வெள்ளப்பெருக்கு; 80,000 மக்கள் பாதிப்பு
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் 50 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாகத் திகழும் பாங்காக்கில் நிலவும் இந்தச் சீரற்ற வானிலையால், அந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


