ஓட்-கோர்ஸ் (Haute-Corse): வெடிபொருளால் தகர்க்கப்பட்ட வீடு – தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு புலனாய்வு!

ஓட்-கோர்ஸ் (Haute-Corse): வெடிபொருளால் தகர்க்கப்பட்ட வீடு – தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு புலனாய்வு!

பிரான்சின் ஓட்-கோர்ஸ் (Haute-Corse) பகுதியின் கிசோனாசியா (Ghisonaccia) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீடொன்று வெடிபொருட்கள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் (terrorisme) செயலுக்குத் தயாராகும் நோக்கில் குற்றவாளிகள் ஒன்றிணைந்தமை தொடர்பில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு அரச சட்டத்தரணி அலுவலகம் (Pnat) தனது புலனாய்வுகளைத் (enquête) தொடங்கியுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நிகழ்விடத்தில் «FLNC 22/10» (கோர்சிகா தேசிய விடுதலை முன்னணி – ஒற்றோபர் 22) என எழுதப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த இந்த வீடு, பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் (continent) வசிக்கும் ஓய்வுபெற்ற இணையருக்கு (couple) உரியதாகும்; இது அண்மையில் விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. கிசோனாசியா நகரமன்றத்தின் அறிவிப்பின்படி, வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே பிரதான நிலப்பரப்பிற்குத் திரும்பிவிட்டதால், வெடிப்பு நிகழ்ந்த வேளையில் அங்கு எவரும் இருக்கவில்லை.

இந்த நிகழ்வு தொடர்பான புலனாய்வுப் பணிகள், பயங்கரவாத எதிர்ப்புத் துணைப் பிரிவு (SDAT), பாஸ்தியா (Bastia) மற்றும் அஜாசியோ (Ajaccio) நகரங்களின் தேசியக் காவல் துறைப் பிரிவுகள் (DIPN) மற்றும் கோர்சிகா காவல் படையின் (gendarmerie) தேடுதல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோர்சிகா அல்லாதவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

, கடந்த ஓகஸ்ட் மாதம், FLNC-UC என்ற அமைப்பு (groupuscule clandestin indépendantiste), கோர்சிகாவுக்குத் தன்னாட்சி வழங்கும் நடைமுறையை ஒரு “கேலிக்கூத்து” (mascarade) என விமர்சித்திருந்தது. அத்துடன், கோர்சிகா தீவில் குடியேறும் கோர்சிகா அல்லாத வெளிநபர்களுக்கும் இந்த அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin