பிரான்சு அரசியல் களத்தின் மையமாக மீண்டும் உருவெடுக்கும் ‘ அகதிகள் ‘ (Immigration) விவகாரம்!
பிரான்சில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்ட நிலையில்,
அரசியல் விவாதங்களில் ‘குடிவரவு’ (Immigration) விவகாரம் மீண்டும் முழு வீச்சில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூலை 30-ஆம் திகதி ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) எல்லையில் ஏற்பட்ட மாபெரும் குடியேற்ற நெருக்கடியைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளர்கள் பலரும் தங்களின் நிலைப்பாடுகளைத் தீவிரமாக முன்வைத்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் எட்வர்ட் பிலிப் (Edouard Philippe), தற்போதைய கட்டுப்பாடற்ற நிலைமையை மாற்றி, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட குடிவரவு’ (Immigration choisie) என்ற கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“பணிபுரியவோ, படிக்கவோ அல்லது புகலிடம் தேடியோ நமது எல்லைக்குள் யார் நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நமக்கு மட்டுமே உள்ளது,” என்கிறார் அவர்.
மறுபுறம், Renaissance கட்சியின் வேட்பாளரான கேப்ரியல் அத்தால் (Gabriel Attal), வேலை தேடி வரும் குடியேற்றவாசிகளுக்கே
முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். “குடும்பமாக வருபவர்கள் மற்றும் மாணவர்களை விட, உழைப்பிற்காக வருபவர்களே அதிகமாக இருக்க வேண்டும்.
அவர்களின் தொழில் மற்றும் பிறந்த நாடுகளின் அடிப்படையில் ஒரு கட்டுப்பாட்டு ஒதுக்கீட்டு முறையை (Quotas) கொண்டுவர வேண்டும்,” என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
2025-ஆம் ஆண்டின் உள் துறை அமைச்சகத் தரவுகளின்படி, உழைப்பிற்காக வந்தவர்கள் வெறும் 50,000 பேர் (13.5%) மட்டுமே.
ஆனால், கல்விக்காக (1,16,000) மற்றும் குடும்ப உறவுகளுக்காக (90,000) வந்தவர்களே அதிகம் என்பதை இவர்கள் தங்களின் வாதங்களுக்குச் சான்றாகக் காட்டுகின்றனர்.
ஷெங்கன் விதிகளில் கைவைக்கும் மரின் லு பென் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் அகதிகள் அதிக அளவில் நுழைந்ததைக் குறிப்பிட்டுள்ள தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லு பென் (Marine Le Pen), “இந்த முட்டாள்தனத்தை பிரான்சு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எல்லையில் கண்காணிப்பைக் கடுமையாக்க வேண்டும். 2027-இல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களுக்கு (Nationaux de l’UE) மட்டுமே ஷெங்கன் (Schengen) எல்லைகளுக்குள் தடையில்லாமல் பயணிக்க அனுமதிப்போம்,” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் எச்சரித்துள்ளார்.
பிரான்சின் அதிபர் தேர்தல் நெருங்கும்போதெல்லாம், அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் மிக எளிதான ‘பகடைக்காய்’ இந்த அகதிகளும் புலம்பெயர்ந்தோரும்தான்.
நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொதுச் சேவைகளின் வீழ்ச்சி ஆகியவற்றை மறைக்க, மீண்டும் ஒருமுறை ‘குடிவரவு’ என்ற துருப்புச்சீட்டை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கத் தங்களுக்குத் தேவையான
‘உழைப்பாளர்களை’ (Immigration de travail) மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள நினைப்பது நவீனக் கொத்தடிமை முறையின் மற்றொரு வடிவமேயன்றி வேறல்ல. உழைக்கும் குடியேற்றவாசிகளும் மனிதர்களே;
அவர்களுக்குக் குடும்பம், உணர்வுகள், உரிமைகள் உள்ளன என்பதை இந்த அரசியல்வாதிகள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
கல்விக்காகவும், போரிலிருந்து தப்பியும் வரும் மக்களைக் குற்றவாளிகள் போல் சித்தரித்து,
வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கும் வலதுசாரிப் பேச்சுகள் ஒருபோதும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது.
மனிதாபிமானத்தை விட வாக்குகளே முக்கியம் என நினைக்கும் இந்த அரசியல் விளையாட்டுகளால், பாதிக்கப்படப் போவது எளிய மக்களே!

