உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாட்டை 2027ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழி அமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்ற தனிநாயகம் அடிகளார் நினைவரங்கம் – 2026 நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றிய உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் வரலாற்றில் முதலாவது சர்வதேசத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து 1968ஆம் ஆண்டு சென்னை, 1970ஆம் ஆண்டு பாரிஸ் ஆகிய நகரங்களில் மாநாடுகள் இடம்பெற்றன.
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 9ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த மாநாடு உலகத் தமிழாராய்ச்சி வரலாற்றிலும் ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
1974ஆம் ஆண்டு மாநாட்டின்போது யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டிருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ் இலக்கியம், மொழியியல், தொல்லியல், கல்வெட்டு ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், அந்த மாநாட்டின் நிறைவு நாளில் இடம்பெற்ற காவல்துறைத் தாக்குதலில் பலர் உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணத்தின் தமிழாராய்ச்சி மாநாட்டு வரலாற்றில் மிகுந்த துயரமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
இதனிடையே, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மாநாட்டு வரலாற்றில் 2019ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற மாநாடு 10ஆவது மாநாடாகப் பதிவாகியுள்ளது.
அதன்பின்னர் மாநாட்டு எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறு அமைப்புகளிடையே வேறுபட்ட பதிவுகள் காணப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு 11ஆவது மாநாடு தொடர்பாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை மையமாகக் கொண்ட பதிவுகள் வெளியாகியுள்ளன.
எனவே, இவற்றை கவனிக்கும் போது 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டை தற்போதைய நிலையில் “11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு” என குறிப்பிடலாம்.
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டுக்குப் பின்னர், 2027ஆம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, யாழ்ப்பாணத்தின் தமிழியல் மற்றும் உலகத் தமிழ் ஆய்வுத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2027ஆம் ஆண்டு மாநாடு நடைபெறுமிடமும், திகதிகளும், ஏற்பாட்டுக் குழு மற்றும் மாநாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

