அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய ஆசிரியராக கடமைபுரிந்த திரு நடராசா வாகீசன் அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
14சென்ரி மீற்றர் உயரமும் 12சென்ரி மீற்றர் அகலமும் இச்சிலையின் கொண்ட தலைப்பாகம் ஒருவகை மங்கலான வெள்ளி போன்ற உலோகத்தால் ஆக்கப்பட்டுள்ளதென பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களால் கருத்து கூறப்பட்டுள்ளது.
இங்கு கிடைத்த ஆபிரிக்கச் சிலையானது ஐரோப்பியக்கண்ட மக்களுக்கோ ஆசியக்கண்ட மக்களுக்கோ உரியதன்று. மாறாக ஆபிரிக்கக் கண்டத்திற்குரிய கலைப்பண்புகளை தன்னகத்தே கொண்டமைந்துள்ளது.
இச்சிலை நீண்ட தாடை, தடித்த உதடு, பின்நோக்கிய நெற்றி, சுருண்ட முடி, பின்பக்கம் அகன்ற தலை, நீண்ட கழுத்து, அகன்ற துவாரமுள்ள காது முதலிய ஆபிரிக்கக் கலை மரபுக்குரிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. இதனால் இச்சிற்பத்தை வடஆபிரிக்க மக்களுக்குரியதென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதனை ஆய்ந்து பார்த்ததில் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஆபிரிக்கர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை அறிய முடிகின்றது. இவர்கள் இசுலாமிய மறையை பின்பற்றாதவர்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது இசுலாமிய மறையை பின்பற்றுவோர் சோனரென அழைக்கப்பட்ட அதேவேளை சுதேச ஆபிரிக்க மறைகளைப் பின்பற்றியோர் பப்பரவரென அழைக்கப்பட்டமையை பின்வரும் வையாபாடல் செய்யுளில் காணலாம். அது வருமாறு,
“சங்கமர்கள் முப்பதுடன் வீர முட்டி தன்னில் நாற் பதுதாத ரெண்மர் தாமும் வங்கணஞ்சேர் கெருடாவி லிருந்து வாழ்ந்தார் வாகுசெறி பள்ளுவிலி வருணந்தன்னிற் றங்கியகுச் சிலியர்”பப் பரவர் சோனர்” தாவறுசீர் வசியர்கரை யார்கள் மிக்க சிங்களவ ருடன்சீனர் மறவரோடு சீர்திகழும் நுகரைநகர் சேர்ந்திட்டாரே.”
வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டே வடஆபிரிக்காவிலுள்ள பப்பரவர் அல்லது மொரோக்கன் சமுகத்தினருடன் வடஇலங்கை தொடர்புகளைப் பேணியமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. பப்பரவர் எனப்படுவோர் ஆபிரிக்க தேசத்திலிருந்து கூலிப்படை வீரர்களாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பின்னைய காலங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருந்திருந்திருக்க வேண்டும்.”
யாழ்ப்பாண வைபவமாலை எனும் தமிழ் நூல் யாழ்ப்பாண அரசர் காலத்தில் பப்பரவர் எனும் வணிகர் குழு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தமையை குறிப்பிடுகின்றது. ஆகவே இம்மக்கள் குழு அல்லைப்பிட்டியிலும் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுவதில் தவறேதுமில்லை. 14ஆம் நூற்றாண்டில் இபன் பதூதா என்ற பயணி யாழ்ப்பாண மன்னரைச் சந்தித்துள்ளார்.
இவர் மொரோக்கோ தேசத்திலிருந்து வந்ததாக அறியக்கிடைக்கின்றது.
மண்கும்பான், நயினாதீவு முதலான இடங்களில் புராதனமான முஸ்லீம்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் தர்கா பாரம்பரியத்துடன் தொடர்பான சின்னங்கள் கிடைத்த போதும் அல்லைப்பிட்டியிற் கிடைத்த சிற்பம் இவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.

