“இலவசமாக ஒரு செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அங்கே நீங்கள்தான் விற்கப்படும் பொருள்!” என்ற ஒற்றை வரியில்தான் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய சதி அடங்கியிருக்கிறது.
பழைய முதலாளித்துவம் உங்களின் வியர்வையையும், உழைப்பையும், நேரத்தையும் உறிஞ்சி லாபம் பார்த்தது. கார்ல் மார்க்ஸ் இதனைத் தோலுரித்துக் காட்டினார். ஆனால், இன்று நாம் வாழும் 21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம் அதைவிடக் கொடூரமானது.
அது உங்கள் உழைப்பைச் சுரண்டுவதில்லை; மாறாக, உங்களின் மூளைக்குள் நுழைந்து உங்களின் ‘ஆன்மாவை’ உறிஞ்சி விற்கத் தொடங்கியுள்ளது.
இதனைத்தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியை ஷோஷானா ஜூபோஃப் ‘கண்காணிப்பு முதலாளித்துவம்’ (Surveillance Capitalism) என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறுகிறார். சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்துகிறோம் என்று அப்பாவித்தனமாகப் பெருமைப்படுகிறோம்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்தப் பெருநிறுவனங்களின் மாபெரும் தொழிற்சாலைகளில், நாம்தான் உற்பத்திக்கான மூலப்பொருட்கள்!
இது எப்படி நடக்கிறது? இந்த மாபெரும் திருட்டின் வலையை மூன்று எளிய படிகளில் கிழித்தெறியலாம்:
ஒரு காலத்தில் பெருநிறுவனங்கள் மலைகளைக் குடைந்து நிலக்கரியையும் இரும்பையும் தோண்டி எடுத்தன.
ஆனால் இன்று, உங்களின் சிரிப்பு, நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கும்போது உங்களின் கண்கள் நிலைத்து நிற்கும் அந்தச் சில நொடிகள், உங்களின் இதயம் துடிக்கும் வேகம், உங்களின் கோபம், உங்களின் காதல் என உங்களின்
‘அன்றாட அனுபவங்களே’ அவர்களுக்குப் புதிய நிலக்கரி.
இயற்கையை மனிதன் எப்படி ஈவிரக்கமின்றிச் சுரண்டினானோ, அதேபோல இன்று சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் உங்களின் உணர்வுகளைத் தரவுகளாக (Data) மாற்றிச் சுரண்டுகின்றன.
நீங்கள் ஒரு முகவரியைத் தேடி ‘வரைபடச் செயலியை’ (Map) திறக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற தகவல் மட்டும் அதற்குப் போதுமானது அல்லவா? ஆனால், அந்தச் செயலி அதைமட்டும் எடுப்பதில்லை.
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டுகிறீர்கள், வண்டியில் யாருடன் பேசிக்கொண்டு செல்கிறீர்கள், உங்கள் குரலில் உள்ள ஏற்ற இறக்கம் என்ன, முந்தைய நாள் இரவில் நீங்கள் எதைத் தேடினீர்கள் என்ற தேவையற்ற அத்தனை தகவல்களையும் உங்கள் அனுமதியின்றியே அது உறிஞ்சிக் குடிக்கிறது.
உங்களுக்குச் சேவையை வழங்கத் தேவையான தரவுகளை விட, பலமடங்கு அதிகமாக உறிஞ்சப்படும் இந்தத் திருட்டுத் தரவுகளையே ‘நடத்தை உபரி’ (Behavioral Surplus) என்கிறார் ஜூபோஃப். இது களவாடப்படும் உங்களின் சொந்த உளவியல் சொத்து!
இப்படித் திருடப்பட்ட தரவுகளை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்? இங்குதான் உச்சக்கட்ட ஆபத்து தொடங்குகிறது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் மாபெரும் செயற்கை நுண்ணறிவுக் கணினிகளுக்கு (Artificial Intelligence) உணவாக ஊட்டப்படுகின்றன. அந்தக் கணினிகள் உங்களை உங்களைவிட மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்கின்றன.
“இவர் இன்னும் பத்து நிமிடங்களில் சோர்வடைவார்.”
“நாளை மாலை இவர் இந்த உணவகத்திற்குச் செல்ல விரும்புவார்.”
“வருகின்ற தேர்தலில் இவர் இவருக்குத்தான் வாக்களிப்பார்.”
இப்படி உங்களின் எதிர்கால நடவடிக்கைகளை அந்த எந்திரங்கள் முன்கூட்டியே கணிக்கின்றன. இந்தக் கணிப்புகள் அனைத்தும் ஒரு இரகசியச் சந்தையில் ‘கணிப்புப் பண்டங்களாக’ மாற்றப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.
ஆடை உற்பத்தியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் ,அரசியல் கட்சிகள் எனப் பலரும் ‘நீங்கள் நாளை என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களின் தேவைகள் என்ன? என்ற உங்களின் எதிர்காலத்தை இன்றே பல கோடிகளுக்கு ஏலம் எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்தக் கண்காணிப்பு முதலாளித்துவத்தின் இறுதி நோக்கம் உங்கள் எதிர்காலத்தைக் கணிப்பது மட்டுமல்ல; உங்கள் எதிர்காலத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைப்பது!
இதனை ‘கருவியாக்க அதிகாரம்’ என்று கூறுகிறார்கள். பழைய காலத்தில் சர்வாதிகாரிகள் துப்பாக்கியைக் காட்டி மக்களைக் கட்டுப்படுத்தினார்கள். ஆனால், இந்த நவீன அல்காரிதம்கள் உங்களின் மூளைக்குள் மிக நுட்பமான தூண்டுதல்களைச் செலுத்துகின்றன. எந்த நேரத்தில், எந்த மனநிலையில் உங்களுக்கு எந்த விளம்பரத்தைக் காட்டினால் நீங்கள் அவர்கள் விரித்த வலையில் விழுவீர்கள் என்பதை அது மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் செயல்படுத்துகிறது.
நீங்கள் உங்கள் சொந்த மூளையால் சிந்தித்து முடிவெடுப்பதாக மார்தட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு அல்காரிதத்தின் கயிறுகளால் ஆட்டுவிக்கப்படும் வெறும் பொம்மையாக மாற்றப்பட்டுவிட்டீர்கள்.
ஜார்ஜ் ஆர்வெல் தனது புகழ்பெற்ற ‘1984’ நாவலில், ஒரு மாபெரும் சர்வாதிகாரி நம்மைத் துப்பாக்கி முனையில் ஒவ்வொரு நொடியும் கண்காணிப்பான் என்று பயந்தார். ஆனால், இன்று நடக்கும் நிஜம் அதைவிடக் கொடூரமானது!
இங்கே யாரும் நம்மை மிரட்டவில்லை.
நாமாகவே பல ஆயிரங்களைக் கொடுத்து விலையுயர்ந்த கைபேசிகளை வாங்கிக்கொண்டு, சந்தோஷமாக நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்கிறோம். நமது சொந்த ஆன்மாவையும், சுதந்திரமான சிந்தனையையும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகச் சிரித்துக்கொண்டே காணிக்கையாக்குகிறோம்.
மனித அனுபவங்களை விற்று லாபம் ஈட்டும் இந்த நவீனக் கண்காணிப்புச் சந்தையில், நாம் மனிதர்கள் அல்ல; வெறுமனே தரவுகளை உற்பத்தி செய்யும் வெறும் சதைப்பிண்டங்கள் மட்டுமே! -சிவா சின்னப்பொடி

