மணல் மூடிய பேரரசு : வல்லிபுரத்தின் மறைக்கப்பட்ட தமிழ் பௌத்த வரலாறு!

யாழ் வடமராட்சி பகுதியிலே வங்கக் கடலிலிருந்து வீசும் கடல்காற்றை சற்று ஆழமாகச் சுவாசித்துப் பாருங்கள்; அது வெறும் உப்புக் காற்றல்ல, ஈழத்துத் தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு காலக் கடல் ஆதிக்கத்தின் மூச்சுக்காற்று!

வல்லிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இன்று நாம் பார்க்கும் மணல் மேடுகள், வெறும் புவியியல் அமைப்புகள் அல்ல. அவை கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை கோலோச்சிய ‘தமிழ் பௌத்தத்தின்’ சுவடுகளையும், சர்வதேச ஆழி வணிகத்தின் பிரம்மாண்டத்தையும் தம்முள் பொத்தி வைத்துள்ள காலப்பேழைகள்.

பிற்கால வரலாற்றுத் திரிபுகளால் இருட்டடிப்பு செய்யப்பட்ட நமது பூர்வீகத் தடங்களை, சான்றுகளின் ஒளியோடு தோண்டி எடுப்போம் வாருங்கள்.

‘வல்லிபுரம்’ என்ற பெயரைக் கேட்டதுமே ஏதோ ஒரு புராணப் பெயர் என எண்ண வேண்டாம். ‘வல்லி’ என்பதற்குத் தூய தமிழில் ‘கொடி’ என்று பொருள். கடற்கரைக் கொடிகள் படர்ந்து விரிந்திருந்த இந்த அழகிய நெய்தல் நிலம், முற்காலத்தில் ‘நெய்தற்பட்டினம்’ என்றும் ‘வல்லிபுரப் பட்டினம்’ என்றும் கம்பீரமாக அழைக்கப்பட்டது.

இது, ஈழத்தின் வடபகுதியை ஆண்ட பூர்வீகத் தமிழ்க்குடிகளான நாகர்களின் முதன்மைத் துறைமுகமாக விளங்கியது. நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தில் இன்றும் தொடரும் நாக வழிபாடே, இப்பழங்குடிகளின் வேர்கள் இங்கு எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதற்கு வாழும் சாட்சியாகும்.

இலங்கையில் பௌத்தம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற ஒரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வரலாற்று உண்மை வேறானது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை ஈழத்துத் தமிழர்கள் பௌத்த தர்மத்தை மிகத் தீவிரமாகப் பின்பற்றினர்.

இதற்குச் சான்று தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. தமிழ்ப் பெருங்காப்பியமான ‘மணிமேகலை’யைப் புரட்டினாலே போதும்.

காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘நாகதீபம்’ அல்லது ‘மணிபல்லவம்’ என்பது இந்த யாழ்ப்பாணமே!

சீத்தலைச் சாத்தனார் விவரிக்கும் அந்தப் ‘புத்த பீடிகையை’ (புத்தரின் பாதங்கள்) தேடி மணிமேகலை வந்திறங்கிய தளம், இந்த வடமராட்சிப் பிராந்தியம்தான். சுருக்கமாகச் சொன்னால், வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த எச்சங்கள் அனைத்தும் தமிழ் வணிகர்களாலும், தமிழ் பௌத்த துறவிகளாலும் செதுக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டவையே.

1936-ஆம் ஆண்டு வல்லிபுரம் ஆழ்வார் கோயில் நிலத்தில் ஒரு தங்கத் தகடு (பொற்சாசனம்) கண்டெடுக்கப்பட்டது. நான்கு வரிகள் மட்டுமே கொண்ட அந்தத் தகடு, பேரினவாதப் பார்வையில் சிக்கிச் சின்னாபின்னமானது.

யாழ்ப்பாணம், அநுராதபுர சிங்கள மன்னன் வசபனின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது என செனரத் பரணவிதான நிறுவ முற்பட்டார். ஆனால், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை மற்றும் சுவீடன் ஆய்வாளர் பீட்டர் ஷால்க் போன்ற அறிஞர்கள் இந்தத் திரையைக் கிழித்தனர்.

பொற்சாசனத்தின் மொழி ‘தமிழ் கலந்த பிராகிருதம்’ என்பதையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘இசிகிரய’ என்ற பெயர் இராயன் அல்லது ‘சிவராசன்’ என்ற தூய தமிழ்ப் பெயரின் திரிபு என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்தனர். ஆக, இது அடிமைச் சாசனம் அல்ல; வடபகுதி தமிழ் நாக மன்னர்களுக்கும், அநுராதபுர அரசிற்கும் இடையே கடல் வணிகத்திற்காகச் செய்துகொள்ளப்பட்ட சுமுகமான ஒப்பந்தப் பத்திரம்!

வல்லிபுரம் என்பது தனித்து இயங்கிய ஒரு கிராமம் அல்ல; அது தென்னிந்தியத் தமிழ் பௌத்த மையங்களோடு இணைக்கப்பட்ட மாபெரும் வர்த்தக மற்றும் தத்துவ தலைநகரம்

[காஞ்சிபுரம்] ──> [நாகப்பட்டினம்] ──(கடல் வழி)──> [வல்லிபுரம்] ──> [அமராவதி]

முற்காலத்தில் காஞ்சிபுரம் பௌத்த தத்துவ ஞானத்தின் தலைநகரமாகத் திகழ்ந்தது. புத்ததத்தர், திக்நாகர் ஆச்சரிய தர்மபாலர் மகாநாமர் போதி தர்மர் போன்ற ஏராளமான மாபெரும் தமிழ் பௌத்த அறிஞர்கள் வாழ்ந்த இடம் அது. காஞ்சிபுரத்தில் பௌத்த தத்துவங்கள் விவாதிக்கப்பட்ட இடங்கள் ‘வழிப்பற்றுகள்’ என அழைக்கப்பட்டன.

இந்தக் காஞ்சிபுரத்து வழிப்பற்றுகளிலிருந்து புறப்பட்ட தத்துவங்களும், துறவிகளும் நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக வல்லிபுரத்தை வந்தடைந்தனர்.

வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை அநுராதபுரக் கலையைச் சேர்ந்ததல்ல; மாறாக அது ஆந்திராவின் ‘அமராவதி’ கலைப்பாணியைச் சேர்ந்தது. காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினத் தமிழ் சிற்பிகளால் செதுக்கப்பட்டு, கடல் மார்க்கமாக இது வல்லிபுரத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இங்கு கிடைத்த சீன, உரோம நாணயங்கள் மற்றும் சோழர் காலக் காசுகள், இது ஒரு சர்வதேச இடைத்தங்கல் துறைமுகமாக இருந்ததை மௌனமாகப் பறைசாற்றுகின்றன.

கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, தமிழகத்தில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. இதன் தாக்கத்தால், தமிழ் பௌத்தம் மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்தது
இந்த மதமாற்றம் எந்த வன்முறையுமின்றி நிகழ்ந்தது.

வல்லிபுரத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை, பிற்காலத்தில் தமிழ் வைணவர்களால் ‘வல்லிபுரம் ஆழ்வார் கோயிலாக’ (விஷ்ணு கோயில்) உருமாற்றம் பெற்றது. பௌத்த மதத்தில் ‘புத்தரின் பாதங்களும்’ ‘சங்கும்’ புனிதமாக வழிபடப்பட்டன.

ஆச்சரியம் என்னவென்றால், அதே வல்லிபுரம் ஆழ்வார் கோயிலில் இன்றும் ‘சங்கு’ முதன்மை வழிபாட்டுப் பொருளாக இருப்பதும், மச்ச அவதார (மீன்) ஐதீகம் கூறப்படுவதும், இது பண்டைய கடல்சார் தமிழ் பௌத்தத்தின் பிரிக்க முடியாத தொடர்ச்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.

வல்லிபுரம் என்பது வேறெவரோ விட்டுச்சென்ற அந்நியச் சுவடு அல்ல. அது காஞ்சிபுரம் வழிப்பற்றுகளோடு தத்துவ உறவாடி, நாகப்பட்டினத்தோடு வணிகம் செய்து, அமராவதிக் கலையை அரவணைத்து வளர்ந்த, பூர்வீக ஈழத் தமிழர்களின் பௌத்த மற்றும் கடல் ஆதிக்கத்தின் அழிக்க முடியாத அடையாளம்!

இறுதியாக பௌத்தம் என்றாலே அது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற ஒரு மேலாதிக்கச் சிந்தனை, திட்டமிட்டே பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மாயையைத் தகர்த்தெறியவும், உண்மை வரலாற்றை நிலைநிறுத்தவும் வல்லிபுரத்தின் வரலாற்றை நாம் அவசரமாக மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

சிங்கள பௌத்தம் எதிர் தமிழ் பௌத்தம்: அடிப்படையான வேறுபாடுகள் என்ன?இன்று தமிழர் நிலங்களில் நிகழும் பண்பாட்டு ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டுமானால், இந்த இரண்டுக்குமான கருத்தியல் வேறுபாட்டை ஒவ்வொரு தமிழரும் கற்றறிவது காலத்தின் கட்டாயமாகும்.

சிங்கள பௌத்தம் (அதிகாரத்தின் அடையாளம்): இது ‘மகாவம்சம்’ போன்ற நூல்களின் வழியே கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் வடிவம். இலங்கைத் தீவு பௌத்தர்களுக்கு (சிங்களவர்களுக்கு) மட்டுமே சொந்தம் என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையை இது மையமாகக் கொண்டது. ஆன்மீகத்தைத் தாண்டி, இது நில ஆக்கிரமிப்பிற்கான ஓர் அரசியல் கருவியாகவே பரிணமித்துள்ளது.

பிற இன மக்களின் அடையாளங்களை அழித்து, ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவும் நோக்கமே இதன் ஆணிவேர்.

தமிழ் பௌத்தம் (அறிவின் அடையாளம்): , வல்லிபுரத்திலும், காந்தரோடையைலும் நாகதீபத்திலும் காஞ்சிபுரத்திலும் நாகா படடனத்திலும் அமராவதியில்லும் செழித்தோங்கிய தமிழ் பௌத்தம் முற்றிலும் மாறுபட்டது. இது உலகளாவிய தத்துவ விசாரணைகளையும், ஆன்மீக விடுதலையையும் ,மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

சீத்தலைச் சாத்தனாரின் ‘மணிமேகலை’ போதித்த அறம், பசிப்பிணி போக்கும் மானுட நேயம் ஆகியவற்றையே இது உயர்த்திப் பிடித்தது. தமிழ் பௌத்தத்திற்கு நிலத்தை அபகரிக்கும் நோக்கமோ, பிற மதங்களை அழிக்கும் எண்ணமோ இருந்ததில்லை.

அது, அறிவையும் தத்துவத்தையும் மானிட விடுதலைக்கான வழிமுறைகளையும் போதிக்கும் ஒரு தூய மார்க்கமாகவே இயங்கியது.

இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் ஆங்காங்கே முளைக்கும் புதிய விகாரைகளைக் காட்டி, தொல்பொருள் எச்சங்களைச் சுட்டிக்காட்டி, “இது எமது மூதாதையர் பூமி” என்று பேரினவாதம் உரிமை கொண்டாடும்போது, நாம் வெறும் உணர்ச்சிவசப்படுவதில் எவ்விதப் பயனுமில்லை.

அதற்குப் பதிலாக, வரலாற்று அறிவைக் கொண்டு நாம் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். “ஆமாம், இங்கு பௌத்த விகாரைகளின் எச்சங்கள் இருக்கின்றன.

ஆனால், அவை உங்களின் சிங்கள பௌத்த சின்னங்கள் அல்ல; அவை எமது பூர்வீகத் தமிழ் பௌத்தத்தின் சுவடுகள்! தென்னிந்திய பௌத்த தலைநகரான காஞ்சிபுரத்தோடு தத்துவ உறவாடிய எமது மூதாதையர்களின் தொன்மங்கள்!” என்று ஆதாரத்தோடு உரைக்க வேண்டும்.

வல்லிபுரத்தின் மணல்மேடுகளில் புதைந்துள்ள தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து, உலக அரங்கில் ஆவணப்படுத்துவது மட்டுமே, தமிழர் நிலங்களில் தொடரும் பௌத்த ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தற்காப்பு அரணாகும்.

வரலாறு என்பது வெறும் கடந்த காலத்தைப் படிக்கும் ஏடு அல்ல; அது நமது எதிர்கால நிலத்தின் உரிமையைக் காக்கும் வலிமையான அறிவாயுதம்!

Recommended For You

About the Author: admin