ஜெனீவா உறுதிமொழிகளை நிறைவேற்றுகிறோம் – அமைச்சர் விஜித ஹேரத் விளக்ககம்!

ஜெனீவா உறுதிமொழிகளை நிறைவேற்றுகிறோம் – அமைச்சர் விஜித ஹேரத் விளக்ககம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்படுவது போன்று, தேசிய பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம். அதன் காரணமாகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே காணி விடுவிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. காணாமலாக்கப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதுவே தேசிய பொறிமுறையாகும்’’ என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி தான் நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையின் சார்பில் பொதுச் சபையில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘இலங்கை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நேற்று ஜெனீவா பேரவைக்கு முன்வைத்தார். இதற்கு முன்னர் முன்கூட்டிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளினால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள். அதனூடாக மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பது உண்மை.

அதேபோன்று, எமது நாடு அண்மையில் சந்தித்த டிட்வா புயலின் பாதிப்புகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமை, அதனால் ஏற்பட்டுள்ள வெளித்தாக்கங்களினால் எமது நாட்டு பொருளாதாரத்தில் ஒருசில தாக்கங்கள் ஏற்பட்டன.

அந்த நெருக்கடியினால் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெளிவாக அறிவித்திருக்கிறார்.

அவரது முன்கூட்டிய அறிக்கையில், கடந்த காலங்களில் இதுதொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறிப்பாக ஊழல், மோசடியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மறையான பல்வேறு விடயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை நீக்குவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் அந்தச் சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஒட்டுமொத்த அறிக்கையையும் எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில், எமது நாடு இனவாத மோதல்கள் இல்லாமல், சமயம் சார்ந்த மோதல்கள் இல்லாமல் நாட்டில் அமைதியை நிலைக்கச் செய்தது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவேற்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இரு முறை பங்குபற்றியிருக்கிறேன்.

அரசாங்கத்தின் சார்பில் எங்களின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், கூட்டத்தொடரின் செயற்பாடுகளுக்கமைய எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெறும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அதுதொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை வெளியிட 05 நிமிட கால அவகாசம் கிடைக்கும். அதற்கமைய, இலங்கையின் நிலைப்பாடு ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் விசேட விவாதமொன்று இம்முறை இடம்பெறாது. பொது விவாதமே இடம்பெறும். அந்த பொது விவாதத்தின்போதே கால அவகாசம் வழங்கப்படும்.

அமைச்சர் என்ற அடிப்படையில் எனது பங்குபற்றல் கட்டாய தேவைப்பாடாக அமையாது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் நான் பங்குபற்றுவேன்.

அந்த அமர்வில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளேன். 28ஆம் திகதி இலங்கையின் சார்பில் பொதுச் சபையில் கருத்து வெளியிடுவேன்.

கடந்த வருடம் ஜனாதிபதி பங்குபற்றியிருந்தார். இம்முறை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் நான் பங்குபற்றவுள்ளேன்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனையின் முக்கிய கருத்துடன் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களின் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளோம்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்படுவது போன்று, தேசிய பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம். அதன் காரணமாகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே காணி விடுவிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதும், கடந்த காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த 250க்கும் அதிகமான தனியார் இடங்கள் கடந்த இரு வருடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையத்துக்காக 1000 ஏக்கர் காணிகள் 1986 ஆம் ஆண்டளவில் கைப்பற்றப்பட்டிருந்தன.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட காணிகளுக்காக உரிமையாளர்களுக்கு காணி பெறுமதிக்கேற்ற நிவாரணத்தொகையை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் விசேட நிவாரணத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், நிவாரணம் வழங்குவதற்கான அலுவலகம் என்பவற்றை வலுப்படுத்தியுள்ளோம்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு 375 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதுபோன்ற பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரையில் இனவாத, மத ரீதியான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவே, தேசிய பொறிமுறையாகும்’’ என்றார்.

Recommended For You

About the Author: admin