இலங்கையிலும் சிம்பாப்வே போன்ற நெருக்கடி ஏற்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை விரிவான மக்கள் கலந்தாலோசனையின்றி நீடிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், சிம்பாப்வேயில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நீதித்துறை நெருக்கடி இலங்கையிலும் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு எச்சரித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஏற்பாடு செய்திருந்த பொது மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள ஓய்வுபெறும் வயது பிரச்சினை அல்ல என்றும், இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் காலம், முறைமை மற்றும் அது பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையே பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிம்பாப்வேயை உதாரணம் காட்டிய அவர், அந்த நாட்டில் 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், அப்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், அவசரமான செயல்முறை மூலம் சிரேஷ்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 70லிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை சட்ட ரீதியான சவால்களையும் பொதுமக்களின் விமர்சனங்களையும் தோற்றுவித்ததுடன், இந்த நீடிப்பு தற்போது பதவியில் இருக்கும் நீதியரசர்களுக்கு பொருந்தாது என சிம்பாப்வே உயர் நீதிமன்றம் ஆரம்பத்தில் தீர்ப்பளித்திருந்தது.

பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மாற்றியமைத்த போதிலும், இந்த சம்பவம் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கடுமையாகப் பாதித்ததுடன், நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு இருப்பதாகக் கருதப்படும் நிலையைத் தூண்டியது என்றும் அவர் விபரித்துள்ளார்.

“இலங்கை தற்போது இதே போன்றதொரு அரசியலமைப்பு சந்தியில் நின்றுகொண்டிருக்கும் வேளையில், நாட்டின் தலைமைத்துவம் சிம்பாப்வே நெருக்கடியின் படிப்பினையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என ஸ்டீவன் திரு தெரிவித்துள்ளார்.

பரந்த கலந்தாலோசனை செயல்முறையின்றி, தற்காலிகமான மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீடிக்க இலங்கை முற்பட்டால், அது இதேபோன்றதொரு சட்டபூர்வமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin