“என் இளமைக்கால ஆட்டத்தைப் போலவே விளையாடுகிறார்”: கிலியன் எம்பாப்பேவை மனம் திறந்து பாராட்டிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

“என் இளமைக்கால ஆட்டத்தைப் போலவே விளையாடுகிறார்”: கிலியன் எம்பாப்பேவை மனம் திறந்து பாராட்டிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

கால்பந்து உலகின் முன்னாள் ஜாம்பவான் ‘இலட்சக்கணக்கான இரசிகர்களின் நாயகன்’ பிரேசிலின் ரொனால்டோ (Ronaldo Nazario), தற்போதைய கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கிலியன் எம்பாப்பேவின் (Kylian Mbappé) ஆட்டத்திறனை மனதாரப் பாராட்டியுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஒருகாலத்தில் முதலிடத்தில் இருந்த ரொனால்டோவை, தற்போது லியோனல் மெஸ்ஸி (19 கோல்கள்) மற்றும் கிலியன் எம்பாப்பே (16 கோல்கள்) இருவரும் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

இது குறித்துப் பேசிய ரொனால்டோ, “சாதனைகள் யாவும் தகர்க்கப்படுவதற்கே உருவாக்கப்படுகின்றன. எண்கள் என்பதைத் தாண்டி, அவர்கள் கால்பந்து வரலாற்றில் விட்டுச் செல்லும் சுவடுகளே முக்கியம்” எனத் தாராள மனதுடன் குறிப்பிட்டுள்ளார்.

“எம்பாப்பே, எனது வாரிசு!”

‘லெக்கிப்’ (L’Equipe) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய கால்பந்து வீரர்களில் எம்பாப்பேவின் ஆட்டமுறை தனக்கு மிக நெருக்கமானது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“கிலியன் எம்பாப்பேவைப் பார்க்கும்போது, எனது உச்சகட்ட ஆட்டத்திறனில் (Apogée) நான் எப்படி இருந்தேனோ, அதேபோன்ற ஒரு பாணியை அவரிடம் காண்கிறேன். இன்றைய தலைமுறை கால்பந்தின் மிகப்பெரிய வீரர்களில் அவரும் ஒருவர். கால்பந்து ஜாம்பவான்களின் உண்மையான வாரிசு அவர்தான்!” என அவரை வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தங்கக் காலணி (Soulier d’or) யாருக்கு?

தற்போதைய 2026 உலகக் கிண்ணத் தொடரில், கோல் வேட்டையில் மெஸ்ஸி (6 கோல்கள்) முன்னிலையில் இருக்க, அவரைத் தொடர்ந்து எம்பாப்பே (4 கோல்கள்) கடும் போட்டியில் உள்ளார். இவர்களுடன் உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembélé), வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) மற்றும் எர்லிங் ஹாலந்து (Erling Haaland) ஆகியோரும் தலா 4 கோல்களுடன் ‘தங்கக் காலணி’க்கான கடும் போட்டியில் உள்ளனர்.

1958 ஆம் ஆண்டு பிரான்சின் ஜஸ்ட் பாண்டெய்ன் (Just Fontaine) ஒரே தொடரில் அடித்த 13 கோல்கள் என்ற மாபெரும் சாதனையை மெஸ்ஸியோ அல்லது எம்பாப்பேவோ முறியடிப்பாரா என்பதே தற்போது கால்பந்து இரசிகர்களின் கேள்வியாகும்

Recommended For You

About the Author: admin