பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள ‘புவ்ராஜ்’ (Beuvrages) நகரில், 15 மாதக் குழந்தைகளான இரட்டைச் சகோதரிகள் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல், வீட்டிற்குள் குழந்தைகள் அசைவற்று இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவசர முதலுதவி குழுவினரை அழைத்தனர் .
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், அந்த இரட்டைக் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
விசாரணையில், குழந்தைகள் நீர்ச்சத்தின்மை (Déshydratation) காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை அவர்களின் கட்டிலில் சடலமாகவே கண்டெடுத்துள்ளனர்.
அதே வீட்டில் வசித்து வந்த 4, 5 மற்றும் 6 வயதுடைய மற்ற மூன்று குழந்தைகளும் கடும் நீர்ச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; அவர்களது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குடும்பம் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளது. தற்போது இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக, அந்தப் குழந்தைகளின் பெற்றோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர் (Garde à vue).
கடும் வெப்பம் நிலவும் இந்தக் காலக்கட்டத்தில், பச்சிளங் குழந்தைகளின் பராமரிப்பில் ஏற்பட்ட மிக மோசமான கவனக்குறைவே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமென குற்றம் சாட்டப்படுள்ளது See less

