வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் பதவிநீக்கம்
வவுனியா மாநகர சபை மேயர் பதவி நீக்கப்பட்டதுடன் உறுப்பினர் பதவியும் நீக்கம்! வெளியாகியது வர்த்தமானி
வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அரச அச்சக திணைக்களத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்கப்படுகிறார் என வர்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1947ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் இணைந்து வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநரான நாகலிங்கம் வேதநாயகன், மேற்கூறிய சட்டங்களின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், தனிநபர் விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, அதனைப் பரிசீலித்ததன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்.
இதற்காக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.கந்தையா அரியநாயகம் அவர்களை ஆணையாளராக நியமித்துஇ வவுனியா மாநகரசபை தொடர்பான நடவடிக்கைகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 277(1ஏ) பிரிவின் கீழ் பணித்திருந்தேன்.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 576) பிரிவு 277(1) இன் (ஏ) மற்றும் (டீ) உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் படி மேயராகத் தொடரத் தகுதியற்றவர் என நான் திருப்தியடைந்துள்ளேன்.
எனவே, 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277(1) பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் புளொட் அமைப்பின் ஊடாக போட்டியிட்ட சு.காண்டீபன் வெற்றி பெற்று தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றி இருந்ததுடன், எதிரணியில் 10 உறுப்பினர்கள் இருந்தனர்.
வவுனியா மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகள் பிழையாக இடம்பெற்றதாகவும் அப் பதவிகளை வறிதாக்கி மீள தெரிவை மேற்கொள்ளுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்களான சு.பிறேமதாஸ், விஜயகுமார் ஆகிய இருவரால் தொடர்பட்ட வழக்கிற்கு அமைய கடந்த 8 மாதங்களாக செயற்படாது இருந்த வவுனியா மாநகரசபை இம் மாதம் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பை அடுத்து பிரதி மேயர் தவிர்ந்து மேயரின் கீழ் சபை இயங்கி வந்த நிலையில் குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றமும் யூலை மாத முற்பகுதியில் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

