வவுனியா ஓமந்தையில் தமது கிராமத்துக்கான கிரவல் வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதாக கூறி டிப்பர்களை வழிமறித்து மக்கள் போராட்டம்! – தவிசாளர் விஐயம்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்கள் தங்களின் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட கிரவல் மற்றும் மக்கி மண் ஆகியவற்றை வேறு கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (ஜூன் 23) மண்ணை ஏற்றிய டிப்பர் வாகனங்களை வழிமறித்து எதிர்ப்பினை வெளியிட்டனர்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2024 ஆம் ஆண்டு மாகா (MAGA) நிறுவனத்தின் ‘கை ப்ராஜெக்ட்’ திட்டத்தின் கீழ் ஓமந்தை ஆனந்தபுளியகுளம், சேமமடு ஆகிய கிராமங்களுக்கான பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், அப்போதைய அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக இவ்வேலைத்திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர், அப்பகுதியின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட 740க்கும் மேற்பட்ட டிப்பர் கிரவல் மற்றும் மக்கி என்பன வேறு தேவைகளுக்கு பயன்படுத்துமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தில் சிரான பாதைகள் இன்மையினால் , தங்களின் கிராமத்து வீதிகளும் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்படும் என்ற நம்பிக்கையில், அப்பகுதி பொது மைதானத்தில் இம்மண்ணைச் சேமித்து வைக்க கிராம மக்கள் தார்மீக அடிப்படையில் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுவதுடன் அப்போதைய பிரதேச சபை செயலாளரும் இதனை உறுதிப்படுத்தி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது
மீள்குடியேற்றத்தின் பின்னர் எவ்வித அடிப்படை அபிவிருத்திகளும் இன்றிப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த இக்கிராம மக்களுக்கு, இந்த மண் ஒரு பெரும் நம்பிக்கையாக இருந்தது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தற்போதைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், கடந்த சில வாரங்களாக மைதானத்தில் இருந்த கிரவல் மண், மக்கி என்பன புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்துக்குப் பயன்படுத்தப்படாமல், அவ் பகுதி வட்டார உறுப்பினர் தலைமையில் மகிழங்குளம் உள்ளிட்ட வேறு கிராம வீதிகளுக்குப் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை அவதானித்த கிராம மக்கள், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மண் ஏற்றிச் செல்லும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த வட்டார உறுப்பினர், புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்து வீதிகளையும் குறிப்பிட்ட அளவில் செப்பனிட்டுத் தருவதாக எழுத்துப்பூர்வமாகக் கடிதம் வழங்கியுள்ளார்.
ஆனால், அந்த வாக்குறுதியின்படி வெறும் ஒன்றரை கிலோமீட்டர் (1.4 கி.மீ) தூரம் மட்டுமே தற்காலிகமாகச் செப்பனிடப்பட்டு, எஞ்சிய பெருமளவிலான மண் மீண்டும் வெளிக்கிராமங்களுக்குக் எடுத்துச்செல்லப்பட்ட வண்ணமே இருந்தது.
தங்கள் கிராமத்து வளம் தங்களை ஏமாற்றி அள்ளப்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்கள், நேற்று மண்களை ஏற்றிய டிப்பர் வாகனங்களை வழிமறித்துத் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் நேரடியாகச் சென்று மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி கிராமத்து வீதிகள் முழுமையாகப் புனரமைக்கப்படும் வரை, இங்கிருந்து ஒரு டிப்பர் மண் கூட வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக நின்று தங்களின் தார்மீக உரிமையைக் கோரினர்.
அதன் பின்னர் எஞ்சிய மண்களையும் அவ்விடத்தில் விட்டு சென்றதுடன் கிரவல் ஏற்றிய வண்ணமிருந்த டிப்பர்களின் கிரவல்களும் மீண்டும் அதே இடத்தில் கொட்டப்பட்டதன் பின்னர் டிப்பர்கள் வெளியே செல்ல பொதுமக்களினால் அனுமதிக்கப்பட்டது
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளரின் விளக்கம்
“இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வினவிய போது, தமது சபையின் கீழேயே ஒப்பந்தம் கோரப்பட்டு, இக்கிரவல்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அந்த வட்டாரத்தைச் சார்ந்த கிராமங்களுக்கே கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனைத் தவிர வேறு அயல் கிராமமான மகிழங்குளம் எனும் கிராமத்துக்கு மாத்திரமே வேறொரு வட்டாரத்துக்குக் கிரவல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த கிரவல் தமது சபைக்குச் சொந்தமான மைதானத்திலேயே காணப்படுவதாகவும் தவிசாளர் தெரிவித்திருந்தார். இக்கிரவல்கள் அனைத்தும் மாகா (MAGA) நிறுவனத்தினால் தமக்கு 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதோடு, அவை கிரவல் சேமிப்பதற்கு இடவசதி இன்றி மாத்திரமே புதிய வேலர் சின்னக்குளம் கிராம மைதானத்தில் தாம் சேமித்து வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தில் ஒரு சில வீதிகள் செப்பனிடப்பட்டு வருவதுடன், ஏனைய வீதிகளையும் தாம் செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பள்ளங்களுக்கு மக்கியலை நிரவி அதனைச் செம்மைப்படுத்தி, அதன் பின் கிரவல் நிரவும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அவ்மைதானத்தில் போதுமான கிரவல் மற்றும் மக்கியல் உள்ளமையினால், அந்த மக்கியலைக் கொண்டு அக்கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க ஒரு சில வீதிகளைச் செப்பனிட்டு வழங்கவும், எதிர்காலத்தில் அக்கிராமத்தின் மிகுதி வீதிகளையும் செப்பனிட்டு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், பிரதேச சபையின் செயற்பாடு என்பதினால் தமது அனுமதியுடனே, அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மேலும் எமது சபையினால் பொதுமக்களுக்கு எவ்வித வாக்குறுதியும் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை எனவும் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
புதிய வேலர் சின்னக்குளம் கிராம மக்களின் ஏக்கக் குரல்
“மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது கிராமத்தில் ஒரு சில பாதைகள் மட்டுமே புனரமைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய பாதைகளின் புனரமைப்பு எப்போது முடிவடையும், எங்களது வாழ்வாதாரம் எப்போது உயரும் என்ற ஏக்கத்தில் நாங்கள் உள்ளோம்.
நாங்கள் ஒன்றும் உயர்தரமான காபட் (Carpet) வீதிகளையோ அல்லது தார் வீதிகளையோ கேட்கவில்லை. நாங்கள் கேட்பது அனைத்தும் எமது அன்றாடப் போக்குவரத்துக்குத் தேவையான சாதாரண கிரவல் வீதிகளை மாத்திரமே. தற்போது அவ்வீதிகள் அனைத்தும் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன.
எனவே, எவ்வித பாரபட்சமும் செய்யாது, பிரதேச சபைச் செயலாளர் எங்களுக்கு அன்று வழங்கிய வாக்குறுதியின்படி, எஞ்சியிருக்கும் மண்ணைக் கொண்டாவது எமது வீதிகளைச் செப்பனிட்டுத் தருவார்களா?

