வவுனியாவில் இளைஞர் கைது மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பாவனை இல்லை என உறுதி!

வவுனியாவில் இளைஞர் கைது விவகாரம்:

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பாவனை இல்லை என உறுதி!

வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

 

எனினும், பொலிஸாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த இளைஞர், தன்னை பொலிஸார் தாக்கியதாகவும் கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞனின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவரது உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞரை பிணையில் விடுவித்த நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin