சீனப் பேருந்துகளை இறக்குமதி செய்து அரசாங்கம் பாரிய ஊழல் – சாமர சம்பத் குற்றச்சாட்டு
வழமையாக இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளை விடுத்து, சீனாவிலிருந்து அதிக விலை கொடுத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதன் ஊடாக தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு அமைச்சின் மூலமும் பாரிய ஊழல்களில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கைக்கு வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் டாடா (Tata) அல்லது லேலண்ட் (Leyland) பேருந்துகளுக்குப் பதிலாக, சீனாவிலிருந்து ‘ஃபோட்டோன்’ (Foton) ரக பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சந்தையில் உள்ள டாடா அல்லது லேலண்ட் பேருந்துகளை விடவும், இந்த சீன ஃபோட்டோன் பேருந்து ஒன்றின் விலை 60 இலட்சம் ரூபாய் அதிகமாகும். இதன் மூலம், அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்களும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில் மக்கள் பணத்தைத் திருடும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் இவ்வாறான ஊழல் வேலைத்திட்டங்களுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்த தருணத்தில் யார் ஜனாதிபதி அல்லது யார் பிரதமர் என்பது முக்கியமல்ல, ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே அவசியமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

