அமெரிக்கா – ஈரான் அமைதி உடன்படிக்கையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்கா – ஈரான் அமைதி உடன்படிக்கையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

திங்கட்கிழமையான இன்று உலகச் சந்தையில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 83.82 டொலராகக் குறைந்துள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 80.95 டொலராகப் பதிவாகியுள்ளது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பொக்ஸ் நியூஸ் ஊடகத்துக்குத் தெரிவிக்கையில், இது அமெரிக்காவுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றும், எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை வீழ்ச்சி குறித்து ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் உமுத் ஷோக்ரி (Umud Shokri) அல் ஜசீரா ஊடகத்துக்கு தெரிவித்துள்ள கருத்தில், “ஜூன் 14 அன்று எட்டப்பட்ட அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு உடன்படிக்கையையும், பல வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் தணிந்துள்ளமையையும் இந்த சந்தை மாற்றம் பிரதிபலிக்கிறது. ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அச்சம் நீங்கியுள்ளதால், வர்த்தகர்கள், புவிசார் அரசியல் அபாயக் காரணிகளை சந்தையிலிருந்து நீக்கியுள்ளனர்.

இந்த விலை வீழ்ச்சி உலகளாவிய தேவைக் குறைவை காட்டவில்லை, மாறாக மத்திய கிழக்கின் மிக மோசமான சூழல் மாறுபட்டுள்ளதையே காட்டுகிறது. இந்த உடன்படிக்கை தொடருமானால் வரும் நாட்களிலும் எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், அமெரிக்கா – ஈரான் இடையிலான பரஸ்பர நம்பிக்கை இன்மை மற்றும் பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன.

இந்த உடன்படிக்கை பலவீனமடைவதற்கான எந்தவொரு அறிகுறியும் எண்ணெய் சந்தையில் மீண்டும் பாரிய விலையேற்றத்தையோ அல்லது மாற்றத்தையோ மிக வேகமாக ஏற்படுத்தக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin