பிரான்சில் மின்னுருளிகளுக்கு இனி தலைக்கவசம் கட்டாயம்!! மீறுவோருக்கு 1,500 யூரோக்கள்!!

பிரான்சின் ஓ-து -சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மாபெரும் அபராதத்துடன் புதிய சட்டம் !

பிரான்சின் வீதிகளில் மின்னுருளிகளின் (Trottinettes électriques) ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்,
அதனால் ஏற்படும் விபத்துகளும் மரணங்களும் நாளுக்கு நாள் பெருக்கெடுத்து வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கையாக, Hauts-de-Seine மாவட்ட ஆட்சியர் (Préfet) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஒரு புதிய அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இனி இந்தச் சாதனங்களில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறினால் மாபெரும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது!

இயந்திரவகைத் தனிநபர் போக்குவரத்துச் சாதனங்கள் (Engins de déplacement personnel motorisés – EDPM) எனப்படும் மின்னுருளிகள், ஒற்றைச் சக்கர வண்டிகள் (Monoroues), மற்றும் மின் சக்கரப் பலகைகள் (Gyropodes et hoverboards) ஆகியவற்றை ஓட்டுபவர்களுக்கான புதிய விதிகள் இதோ:

தலைக்கவசம் கட்டாயம்: இனி ஓ-து -சென் மாவட்டத்திற்குள் இந்தச் சாதனங்களை ஓட்டும் அனைவரும் கண்டிப்பாகத் தலைக்கவசம் (Casque) அணிந்திருக்க வேண்டும்.

ஒளிரும் மேலாடை: இரவிலும் பகலிலும் தொலைவிலிருந்தே எளிதில் காணக்கூடிய வகையிலான ஒளிரும் மேலாடை (Gilet haute visibilité) அல்லது ஒளிரும் பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வயது மற்றும் வேகக் கட்டுப்பாடு: இவற்றை ஓட்டுபவர்கள் குறைந்தது 14 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், வண்டியின் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டக் கூடாது.

“ஒவ்வொரு விபத்தும் தாங்க முடியாத ஒரு மாபெரும் துயரம்” எனக் குறிப்பிட்டுள்ள ஆட்சியர் அலெக்சாண்டர் ப்ரூஜெர் (Alexandre Brugère), இந்தப் புதிய பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் (Amende) விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பு (Contrôles renforcés) முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் சில தொடர் துயரச் சம்பவங்கள் உள்ளன. அண்டை மாவட்டமான சென்-எ -மார்னில் (Seine-et-Marne) இந்த ஆண்டு நடந்த 45 விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்;

51 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளில் சிக்கியவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரமே ஜூலை 3 அன்று அங்கு இதேபோன்ற சட்டம் வரக் காரணமானது.

மேலும், ஓ-து -சென் மாவட்டத்தில் உள்ள ரூவேல் -மால்மேசோன் (Rueil-Malmaison) நகரில் ‘சீசர்’ (César) என்ற சிறுவன் மின்னுருளி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.

அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்தே, அந்த நகரின் முதல்வர் கடந்த ஜூலை 8-ஆம் திகதி முதல் தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கினார்.

தற்போது பல நகரங்களின் முதல்வர்கள் தங்களது பகுதிகளில் இந்தச் சட்டத்தைத் தாமாகவே முன்வந்து நடைமுறைப்படுத்தி வரும் வேளையில், பிரான்ஸ் அரசு தேசிய அளவிலும் (Échelle nationale) இதனை ஒரு பொதுச் சட்டமாகக் கொண்டுவரத் தீவிரமாக விவாதித்து வருகிறது.

இனி பிரான்ஸ் வீதிகளில் கவனக்குறைவாகப் பறப்பவர்களின் சிறகுகள் ஒட்டநறுக்கப்படும் என்பது மட்டும் உறுதி!

Recommended For You

About the Author: admin