அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே சுமுகமான அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
அவர் தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
“தீவிரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த அமைதி உடன்படிக்கைக்கான உத்தியோகபூர்வ கையெழுத்திடும் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் “ஈரானிய இஸ்லாமிய குடியரசுடனான உடன்படிக்கை தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய, ஹோர்முஸ் நீரிணையை கட்டணங்கள் ஏதுமின்றி சுதந்திரமான போக்குவரத்துக்காக திறப்பதற்கு நான் இதன் மூலம் முழுமையான அதிகாரத்தை வழங்குகிறேன். அதேநேரம், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடையை (Naval blockade) உடனடியாக நீக்குவதற்கும் உத்தரவிடுகிறேன்.
உலக நாடுகளின் கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்குங்கள். எண்ணெய் விநியோகம் தங்குதடையின்றி பாயட்டும்!” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையின் மூலம், உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் மத்திய கிழக்கிலும் நிலவி வந்த போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

