பிரெஞ்சு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானப் பிரிவில் (Aéronavale) பணியாற்றிய முன்னாள் போர் விமானி ஒருவர், சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்களை வேற்று நாட்டுக்கு கசியவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 5,60,000 சந்தாதாரர்களைக் கொண்ட பிரபலமான ஒரு யூடியூப் (YouTube) சேனலையும் நடத்தி வந்த இந்த முன்னாள் அதிகாரி, பிரான்ஸ் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமல் ரகசியமாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் ஆகிய காலகட்டங்களில், தென் ஆப்பிரிக்கா சார்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலம் நிதி பெற்று இவர் சீனா சென்றுள்ளார்.
அப்போது அவர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியில் இருந்தபோதிலும், இந்த பயணங்கள் குறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், பாரிஸ் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் 2025 பிப்ரவரி மாதம் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, பிரான்ஸின் உள்நாட்டு உளவு அமைப்பான ‘DGSI’ மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து, ஜூலை 23 அன்று அவர் மீது உளவு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்த முன்னாள் அதிகாரி, “நான் சீனாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற இரு கருத்தரங்குகளில் மட்டுமே கலந்துகொண்டேன். 2019-க்குப் பிறகு நான் சீனா பக்கமே செல்லவில்லை” எனத்
தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தை ஒரு சிறப்பு நீதிபதி தீவிரமாக விசாரித்து வருகிறார். பிரெஞ்சு ராணுவ அதிகாரியே சீனாவுக்கு உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

