மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்; நாடாளுமன்ற சட்ட மூலத்திற்காகக் காத்திருப்பு!
நாடாளுமன்றத்தினால் மாகாண சபைத் தேர்தல் முறைமைக்குரிய சட்டம் இயற்றித் தரப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தேவையுமில்லை எனவும், தேர்தலுக்குத் தேவையான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிற்போடப்பட்ட தேர்தல்களை இந்த அரசாங்கமே நடத்தியது. அதற்கமைய, இதுவரை எமது அரசாங்கத்தின் கீழ் இரண்டு தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.”
என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

