தங்கத்தை விற்க திண்டாடும் ‘துபாய்’: தள்ளுபடியில் விற்கிறோம் ‘வாங்க’ என்று அழைக்கும் வணிகர்கள்!
10வது நாளாக ஈரானில் போர் தொடர்கிறது. ஈரானில் தொடங்கிய தாக்குதல் துபாய், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளுக்கும் பரவி உள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மட்டும் பிரச்னை இல்லை. துபாய் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வணிகம் செய்யவும் சத்தமில்லாமல் தத்தளித்து வருகிறது.
ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் துபாயில் இருந்து தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் இருந்து வரும் தங்கம் கூட, துபாய்க்கு வந்த பிறகு தான் ஆசிய நாடுகளுக்குப் பயணம் ஆகின்றன.
தங்கத்தின் பாதுகாப்பு கருதி, அது எப்போதும் விமானத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும். இப்போது துபாயில் நிலவும் பதற்றத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதனால், பிசிக்கல் தங்கத்தை துபாயால் வணிகம் செய்ய முடியவில்லை.
சாலை பயணம் சாத்தியமில்லையா?
சரி… விமானங்கள் மூலம் தான் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அருகில் இருக்கும் நாடுகளுக்கு சாலை வழியாக வணிகம் செய்யலாமே என்று பார்த்தால் அதிலும் சிக்கல் உள்ளதாம்.
சாலை வழியாக தங்கத்தை கொண்டு செல்வதற்கு அதிக செலவுகளும் ஆகும்… பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.
ஈரான் போர் நீடித்து… துபாயில் பதற்றம் தொடர்ந்தால் இந்தியா போன்ற நாடுகளுக்கு தங்கம் வந்து சேர்வதில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டில் விலை அதிகரிக்கலாம்.
Bloomberg அறிக்கை
துபாயில் ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்புகள்… ரத்தாகும் விமானங்கள் போன்றவற்றால் துபாயில் இருந்து தங்கம் வாங்க வணிகர்கள் யோசிக்கிறார்கள்.
யுஏஈயில் உள்ள தங்க நகை விற்பனையாளர்கள் மற்றும் நகைக் கடைகள், இப்போது தங்கம் வாங்க விரும்புவோருக்கு அதிகபட்ச சேமிப்பு கிடைக்கும் வகையில் தள்ளுபடிகளும் பண சலுகைகளும் அறிவித்துள்ளனர் என கல்ஃப் நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. . இது வாங்குவோருக்கு இயன்றதெல்லாம் சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது எனவும், அடுத்த வாரம் முதல் “துபாய் சம்மர் சர்பிரைசஸ்” விழாவின் போது சிறப்பு சலுகைகளும் தங்க வாங்குவோருக்கு கூடுதல் பலனாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

