அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! – ஈரான் திட்டவட்டம்!
பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. இதில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல்வேறு நாடுகளின் அரசுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் திட்டம் ஈரான் அரசுக்கு இல்லை என கமேனியின் மூத்த ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் விரும்பும் வரையில் இந்தப் போரை எங்களால் தொடர முடியும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி அந்நாட்டின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

