சமூக வலை தளங்களில் இடம்பெறும் உழைப்புத் திருட்டும், அறிவுசார் வறுமையும் !

வரலாற்றில் ஒரு காலத்தில், உண்மையை மறைப்பதற்கு அதிகார வர்க்கம் ‘தணிக்கைகளை’ (Censorship) பயன்படுத்தியது.

ஆனால், இன்றைய எண்மிய யுகத்தில், உண்மையை மறைக்கக் கையாளப்படும் உத்தி ‘தகவல் பெருக்கம்’. சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சுட்டிக்காட்டுவது போல, முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை, அர்த்தமற்ற செய்திகளின் குவியலுக்குள் மூழ்கடித்து விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் போலிச் செய்திகளும், திசைதிருப்பல்களும் இந்த அதிகார உத்தியின் வெளிப்பாடுகளே.

மறுபுறம், ஒரு படைப்பாளியின் சிந்தனையையும் உழைப்பையும் பிரதியெடுத்து, தங்களின் சொந்த ஆக்கமாக வலைத்தளங்களில் பதிவேற்றும் ‘அறிவுசார் களவாடல்கள்’ (Intellectual theft) இன்று சாதாரணமாகிவிட்டன.

மூல ஆசிரியரின் அடையாளத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு, மலிவான புகழுக்காகச் செயல்படும் இந்தத் தகவல் திருடர்கள் உழைப்பை மட்டும் சுரண்டவில்லை; சமூகத்தின் சிந்தனை ஆழத்தையே சிதைக்கிறார்கள்.

இந்தத் தகவல் திருடர்களின் உளவியலை நாம் சற்று ஆழமாக அணுக வேண்டியுள்ளது. இது அடிப்படையில் ஒருவகை ‘அறிவுசார் வறுமையின்’ (Intellectual poverty) வெளிப்பாடாகும். உண்மையான தேடலோ, வாசிப்போ, சிந்திக்கும் திறனோ இல்லாத இவர்கள், இன்றைய ‘கவன ஈர்ப்புப் பொருளாதாரத்தின்’ (Attention economy) மாயைக்குள் முழுமையாகச் சிக்கியவர்கள்.

சமூக வலைத்தளங்கள் வழங்கும் உடனடி அங்கீகாரத் தாகம், ‘விருப்பங்கள்’ (Likes) மற்றும் பகிர்தல்களின் எண்ணிக்கையில் கிடைக்கும் போலிப் பெருமிதம் ஆகியவை இவர்களைத் திருடத் தூண்டுகின்றன. ஒரு படைப்பை உருவாக்குவதில் உள்ள பிரசவ வலியை அறியாத இவர்கள், பிறர் பெற்றெடுத்த சிந்தனைகளைச் சொந்தம் கொண்டாடும் ஒருவித மனப்பிறழ்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இது வெறும் தனிமனித அறவீழ்ச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும் உழைப்பற்ற மேலோட்டமான புகழை நோக்கி நகர்வதைக் காட்டும் அபாயச் சங்கு.

எட்கர் மோரின் வலியுறுத்தும் ‘சிக்கலான சிந்தனை’ (Complex thought) என்பது எதையும் ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்காமல், அதன் பலத்த முரண்பாடுகளை ஆராய்வதாகும். ஆனால், இன்றைய ‘கவனச் சிதறல் சமூகம்’ (Distracted society) இத்தகைய திருடப்பட்ட மேலோட்டமான கருத்துகளையே அதிகம் நாடுகிறது.

மிஷேல் பூக்கோவின் பார்வையில் சொல்வதானால், ‘அதிகாரம் என்பது தனக்கான அறிவை உற்பத்தி செய்வது’. இன்று தொழில்நுட்ப நிறுவனங்களும், போலிப் படைப்பாளிகளும் இணைந்து ஒரு போலியான அறிவுத் தளத்தை உற்பத்தி செய்கிறார்கள். சொந்தமாகச் சிந்திக்கும் திறனையோ, வரலாற்று வேர்களையோ தேடாத ஒரு சமூகம், இத்தகைய அதிகாரத்தின் மாய வலைக்குள் மிக எளிதில் வீழ்ந்துவிடும்.

Recommended For You

About the Author: admin