யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை

யாழ்ப்பாணத்தில் பாரிய கஞ்சா வேட்டை: 368 கிலோ கஞ்சா மற்றும் படகு பறிமுதல் – இருவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 35 வயதுடைய இளைஞன் ஒருவரை ஊர்காவற்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாகப் படகு மூலம் கேரளா கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஊர்காவற்துறை காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் கஞ்சா பொதிகளைப் படகு மூலம் கரை சேர்க்க முயன்றபோது, அங்கு மறைந்திருந்த காவற்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

காவற்துறையினரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மூவரும் தப்பியோட முயன்றனர். இதன்போது வேலணை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை காவற்துறையினர் மடக்கிப் பிடித்தனர். எனினும், அவருடன் இருந்த ஏனைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

368 கிலோகிராம் கேரளா கஞ்சா , கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, படகின் வெளியிணைப்பு இயந்திரம் (Outboard Engine)ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், அடையாளங்காணப்பட்ட தப்பியோடிய ஏனைய இருவரையும் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

Recommended For You

About the Author: admin