பிரெஞ்சு குடியுரிமைக்கு இணையவழிக் காத்திருப்பு:

பிரெஞ்சு குடியுரிமைக்கு இணையவழிக் காத்திருப்பு: எண்மிய (டிஜிட்டல்) யுகத்தின் ஆமை வேகமும், முடிவிலா அலைக்கழிப்பும்!

பழைய முறையில் மாவட்ட நிர்வாகத் தலைமையகங்களில் (Préfecture) நேரடியாகக் கோப்புகளைச் சமர்ப்பித்த காலத்தில் இருந்ததை விட, தற்போது இணைய வழியில் (ANEF) குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.

“எல்லாம் எண்ணிய (டிஜிட்டல் மயம்)” என்று சொல்லப்பட்டாலும், விண்ணப்பதாரர்களின் கணக்குகள் (Compte) ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான காத்திருப்பு என்பது, குறிப்பாக இல்-து-பிரான்சு (Île-de-France) போன்ற பகுதிகளில் இன்று எழுதப்படாத விதியாகிவிட்டது.

இணையவழி விண்ணப்பம் என்பது அதிகாரவர்க்கச் சிக்கல்களைக் குறைத்து, எளிதாக்கப்பட்ட ஒரு நடைமுறையாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நடைமுறையில் அது விண்ணப்பதாரர்களின் அலைக்கழிப்பின் உச்சக்கட்டமாகவே மாறியிருக்கிறது.

முன்பு அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து விளக்கமளிக்கவோ, ஆவணங்களைக் கையளிக்கவோ முடிந்தது. இன்று ஒரு கணினித் திரைக்குப் பின்னால், தங்களின் கோப்புகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமல் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

இதில் மிகவும் வேடிக்கையான, அதேசமயம் விரக்தியளிக்கக்கூடிய விஷயம் ‘ஆவணங்களின் காலாவதி’. விண்ணப்பித்து பல மாதங்களாகக் கோப்பில் எந்தச் சலனமும் இருக்காது. பல மாதங்கள் கழித்து கோப்பைத் திறக்கும் நிர்வாகம், “நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் பழையதாகிவிட்டன, புதிய திகதியுடன் மீண்டும் சமர்ப்பியுங்கள்” எனக் கேட்பார்கள். புதியதைப் பதிவேற்றினால், அதைச் சரிபார்க்க மீண்டும் பல மாதங்கள் தாமதம். இது ஒரு ‘முடிவிலாச் சுழலாக’ (Vicious cycle) பலரை வதைக்கிறது.

ஏன் இந்தத் தாமதம்? நிர்வாக சீர்கேடா? ஆட்பற்றாக்குறையா?

இந்தக் கேள்விக்கான விடை, இது பல காரணிகளின் ஒரு கூட்டு விளைவு என்பதேயாகும் :
வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம் என்பதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்துவிட்டது. ஆனால், அதற்கேற்ப பரிசீலனை செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை.

அத்துடன் ANEF தளம் இன்னமும் முழுமையான நிலைத்தன்மையை அடையவில்லை. கணினி நிரல் பிழைகள் (Bugs) காரணமாக, சில நேரங்களில் ஒரு சிறிய ஆவணக் குறைபாடுகூட ஒட்டுமொத்த கோப்பையும் முடக்கிப் போட்டுவிடுகிறது.

பிரெஞ்சு சமூக கட்டமைப்பில் ஒருவரை முழுமையாக இணைத்துக் கொள்வதற்கு முன் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் பாதுகாப்பு விசாரணைகள் (Enquêtes administratives) அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.
இந்தக் கடுமையான தாமதங்கள் குறித்து எழும் தொடர் விமர்சனங்களை அடுத்து, நிர்வாகம் சில மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக, “ஒரு கோப்பு, ஒரு அதிகாரி” (Un dossier, un instructeur) என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின் விண்ணப்பத்தைத் தொடக்கம் முதல் இறுதிவரை பல்வேறு மேசைகளுக்கு மாற்றாமல், ஒரே அதிகாரி கையாளுவார். இது கோப்புகளைப் பரிசீலிப்பதில் ஏற்படும் தேவையற்ற காலவிரயத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது. மேலும், நேரடித் திருத்தங்களை இணையதளத்திலேயே செய்யும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

எது எப்படி இருப்பினும், பிரெஞ்சு குடியுரிமை பெறுவது என்பது வெறும் சட்டப்பூர்வமான நிர்வாக நடைமுறை மட்டுமல்ல; அது விண்ணப்பதாரர்களின் பொறுமையையும் மன உறுதியையும் சோதிக்கும் ஒரு நீண்ட நெடிய காத்திருப்புப் பயணமாகவே இன்று மாறிவிட்டது! See less

Recommended For You

About the Author: admin