ஈஸ்டர் தாக்குதல்: இன்னும் வெடிக்காத ‘குண்டு’கள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதாகியுள்ளார்.
சுரேஷ் சாலே – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகத் தீவிர விசுவாசி.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த மிகப்பெரும் தலைகளில் சுரேஷ் சாலேயும் ஒருவர் என்கிற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக உள்ளது.
TMVP என்கிற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிள்ளையானின் நெருங்கிய சகாவும், TMVPஇன் முக்கியஸ்தருமாக இருந்த ஆசாத் மௌலானா – சேனல் 4 ஊடகத்துக்கு வழங்கிய சாட்சியத்திலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே இருந்தார் எனக் கூறியிருந்தார்.
சுரேஷ் சாலேயுடன் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆசாத் மௌலானாவுக்கு பழக்கம் இருந்துள்ளது. அப்போது சுரேஷ் சாலே மேஜர் தரத்தில் இருந்தார்.
ஆனால் 2005ஆம் ஆண்டிலிருந்து சுரேஷ் சாலேயுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருந்துள்ளது.
TMVPயினருக்கும் சுரேஷ் சாலேக்கும் இடையிலான தொடர்புகளின் போது, சுரேஷ் சாலே – ‘ஷாம்’ எனும் குறியீட்டுப் பெயரால்தான் அழைக்கப்பட்டார்.
பிள்ளையானுக்கு ‘பப்பா’ எனும் குறியீட்டு பெயர் இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ‘அல்ஃபயா’ எனும் குறியீட்டுப் பெயர் இருந்தது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிள்ளையான் பிரிவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டவர்களில் சுரேஷ் சாலேயும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
சுரேஷ் சாலே – மலே சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழ் ஓரளவு தெரியும். அவர் மிகவும் கெட்டித்தனமான புலனாய்வு அதிகாரி.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராணுவத் தலைமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சந்திக்கும் அனைத்துக் கூட்டங்களிலும் சுரேஷ் சாலே இருப்பார்.
அந்தக் கூட்டங்கள் அநேகமாக ஆங்கிலத்திலேயே நடக்கும். ஆசாத் மௌலானாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பினருக்கு தமிழில் ஆசாத் மௌலானா மொழிபெயர்ப்புச் செய்வார்.
சிலவேளைகளில் பிள்ளையானுக்கு தகவல்களை கொடுப்பதென்றால் ஆசாத் மௌலானாவையே சுரேஷ் சாலே தொடர்பு கொள்வார்.
அந்தக் காலப் பகுதியில் பிள்ளையான், கருணா மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கு மூன்று செய்மதித் தொலைபேசிகள் சுரேஷ் சாலே மூலம் வழங்கப்பட்டிருந்தன.
ஒரு கட்டத்தில் கருணாவிடமிருந்த தொலைபேசியை மீளப் பெற்றுக் கொண்டார்கள்.
TMVP செய்ததாக சந்தேகிக்கப்படும் அரசியல் படுகொலைகளின் பின்னணியில் சுரேஷ் சாலே இருந்தார் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றோரின் கொலைகளுக்குப் பின்னால் – அவரும் இருந்தார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் – ஆசாத் மௌலானா வழங்கிய சாட்சியத்தில் இந்த விடயங்களையெல்லாம் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சாலே, அந்தக் கொலைகள் தொடர்பிலும் விசாரிக்கப்படக் கூடும்.
கோட்டபாய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், ஆரம்பத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்படவில்லை என தெரியவருகிறது.
அப்படியொன்றால்?
ராணுவம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்துவதென்று ஆரம்பத்தில் முடிவாக இருந்துள்ளது.
பின்னர் எப்படி – கிறிஸ்தவ தேவாலயங்கள் பக்கம் அந்தச் சதித் திட்டம் திரும்பியது?!
நாளை பார்க்கலாம்.
குறிப்பு: ஓர் ஊடகவியலாளராக எனக்கு கிடைத்த சில முக்கிய தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவற்றை எழுதுகிறேன்.
சுரேஷ் சாலேயுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்ட தரப்பினர்களாக அவர்கள் உள்ளனர்.
தகவல்களை வழங்கியவர்கள் தங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்கிற உறுதிமொழியைப் பெற்றுள்ளார்கள்.
எனவே, செய்தி மூலங்களை – அவர்களின் விருப்பமின்றி வெளிப்படுத்தக் கூடாது எனும் ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைய, அவர்கள் யார் என்பதை, இங்கு நான் தெரிவிக்க முடியாது.

