உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்? ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு!
உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு (SVR) ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ரகசியமாக உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை அல்லது “அழுக்கு குண்டுகளை” (Dirty Bombs) வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனே சொந்தமாக இந்த ஆயுதங்களைத் தயாரித்தது போன்ற தோற்றத்தை உருவாக்க, ஐரோப்பிய தொழில்நுட்பங்களையும் பாகங்களையும் (உதாரணமாக பிரான்சின் TN75 வகை சிறிய அணுமுனைகள்) உக்ரைனுக்கு மாற்ற இந்த நாடுகள் முயற்சிப்பதாக ரஷ்யா கூறுகிறது.
இது சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) மீறும் செயல் என்றும், இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு லண்டனும் பாரிஸும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் மற்றும் பிரித்தானியா முற்றிலுமாக மறுத்துள்ளன. இது உலகின் கவனத்தை திசைதிருப்ப ரஷ்யா பரப்பும் “அபத்தமான பொய்” என்று அவை சாடியுள்ளன.
இந்தத் தகவலால் ஐரோப்பிய நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 27 அன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா இந்தத் தகவலை ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

