யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958)

யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958)

யாழ்ப்பாணத்தின் அறிவுப் பொக்கிஷமாகவும், ஆசியாவின் பெருமையாகவும் விளங்கும் யாழ். பொது நூலகத்தின் பிதாமகர் கே.எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா) அவர்களின் 130 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று (பெப்ரவரி 24, 2026) உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

 

செல்லப்பா அவர்கள் ஒரு தனி மனிதனாக நின்று விதைத்த சிறு விதையே, இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கும் யாழ். பொது நூலகமாகும்.

யாழ் புத்தூாில் 1896 பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்த அவா் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாகப் பணியாற்றினார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சிறந்த புலமை பெற்ற செல்லப்பா 1958 ஏப்ரல் 24 ஆம் திகதி மறைந்தாா்.

1933 இல் ‘புத்தூர் செல்லப்பா’ என்று அழைக்கப்பட்ட இவர், தனது சொந்த ஊரான புத்தூரில் தன்னிடம் இருந்த நூல்களைக் கொண்டு சிறிய நூலகத்தை ஆரம்பித்தார்.

பின்னா் யாழ்ப்பாணத்தில் ஒரு பொது நூலகத்தை அமைப்பதற்காக 1934 ஜூன் மாதம் ஒரு குழுவை உருவாக்கினார்.

தனது சொந்த நூல்களுடன், பலரிடமும் திரட்டிய 1,184 ரூபா 22 சதம் பணத்தை நூலக நிதிக்காக வழங்கினார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் ஒரு வாடகை வீட்டில் 844 நூல்கள் மற்றும் 34 பருவ இதழ்களுடன் நூலகம் தனது பயணத்தைத் தொடங்கியது.

1935 இல் யாழ். பட்டினசபை நூலகத்தைப் பொறுப்பேற்றதை அடுத்து, அது ‘வாடி வீட்டிற்கு’ மாற்றப்பட்டு வளர்ந்தது.

இந்தநிலையில் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், தலைமை நூலகர், பணியாளர்கள் மற்றும் செல்லப்பா அவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தின் கல்வி மரபைக் காத்த ஒரு மாமனிதருக்குச் செலுத்தும் மிகச்சிறந்த கௌரவமாக இந்நிகழ்வு அமைந்தது.

Recommended For You

About the Author: admin