ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!
நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை (25) அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான பொதுவான இணக்கப்பாட்டை எட்டவுள்ளதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பல கட்சி அமைப்பை (Multi-party system) வீழ்த்த இடமளிக்க முடியாது. மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையின் படி, வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு அங்கமே இது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இந்த இணக்கப்பாட்டை உருவாக்குவதற்காக ஏற்கனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மக்களாட்சியின் பலமே பலமான எதிர்க்கட்சிதான் என்கின்றனர் உங்கள் கருத்து என்ன?

