ஷென்சென் வணிக வளாகத்தில் அறிமுகமானது சீனாவின் XPENG IRON மனித உருவ ரோபோ!
சீனாவின் பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான XPENG, தனது அதிநவீன மனித உருவ ரோபோவான IRONஐ ஷென்சென் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக அறிமுகப்படுத்தியது.
173 செ.மீ உயரமும் 70 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, மனிதர்களைப் போலவே நடக்கவும், பேசவும், உரையாடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கைகளில் 22 டிகிரி சுதந்திரமான அசைவுகள் (Degrees of Freedom) இருப்பதால், முட்டையைக் கையாளுவது போன்ற நுணுக்கமான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டது.
இதில் XPENG நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ‘டியூரிங் AI சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2,250 TOPS கணக்கீட்டுத் திறன் கொண்டது.
ரோபோக்களில் முதல்முறையாக சாலிட்-ஸ்டேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது, இது அதிக பாதுகாப்பையும் குறைந்த எடையையும் உறுதி செய்கிறது.
நிகழ்ச்சியின் போது ரோபோ மேடையில் நடக்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியது. இது குறித்து XPENG நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹே சியாபெங் கூறுகையில்:
“குழந்தைகள் நடக்கப் பழகும்போது விழுவது இயல்பானது. இந்த ரோபோவும் விழுந்து, எழுந்து, பின்னர் ஓடத் தொடங்கும். இது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதி,” என நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இந்த ரோபோக்கள் தற்போது ஒரு முன்மாதிரி நிலையிலேயே உள்ளன. எதிர்காலத்தில் இவை தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணிகளுக்கும், வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டிகளாகவும் பயன்படுத்தப்பட உள்ளன.
2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் “IRON” ரோபோக்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய XPENG நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ரோபாட்டிக்ஸ் துறையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

