நீரேற்றப்பட்ட சுண்ணாம்பை இறக்குமதி செய்வதாக காண்பித்து 20 பிளாஸ்டிக் பீப்பாய்களுக்குள், மறைத்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இவற்றின் பெறுமதி சுமார் 03 கோடியே 15 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பீப்பாய்களுக்குள் 4,20,000 மான்செஸ்டர் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள களஞ்சியத்தில் நடத்தப்பட்ட விசேட விசாரணையில், இது பற்றித் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து களுத்துறை பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்துக்காக இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய்த் துறை விசேடசெயலணியின் பணிப்பாளர் திலக் சுரவீரவின் உத்தரவின் பேரிலும் மற்றும் இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.