மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக அரசாங்கம் குறைத்தமைக்காக கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனையாளர்கள் சார்பாகவும் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிப்பதாக, வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே நேற்று தெரிவித்தார்.
கொழும்பு ‘எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர், அமைப்பாளர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பு அவர்களது அலுவலகத்தில் நேற்று (20) திங்கட்கிழமை புறக்கோட்டை குணசிங்கபுரவில் நடைபெற்றது.
வர்த்தக சங்கத் தலைவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு 20 வீத மின்சார கட்டணத்தை குறைத்தமைக்காக நாங்கள் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு 20 வீதத்தை நிவாரணமாக குறைத்தமை எங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக தென்படுகிறது.
கொழும்பில் 24 மணிநேரமும் எங்கள் சிறிய கடைகள் மற்றும் வீடுகளில் மின்சாரமின்றி வாழ முடியாது. எங்களது வருமானத்தில் பாரிய தொகை மின்சாரக் கட்டணத்துக்காக செலவானது.
கடந்த கால அரசாங்கம் மின் கட்டணத்தை குறைப்பதற்காக எடுத்த முடிவுக்காக பொது பயன்பாட்டு ஆணையாளரைக்கூட வீட்டுக்கு அனுப்பியது. மக்கள் தொடர்ச்சியாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களுக்குள் மக்களுக்கு சிறுகச் சிறுக நிவாரணங்கள் கிடைத்து வருகின்றன.இதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. எதிர்கட்சியினர் ஊடகங்களில் வந்து அரசுக்கு எதிராக பிழையான தகவல்களை கூறி வருகின்றனர்.
சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்த முற்படுகின்றனர்.
இவைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மின்சாரம் குறைக்கப்பட்டால், மின்சாரத்தினால் பாவிக்கப்படும் உற்பத்திகள் உணவுகள் பொருட்களின் விலைகளைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்தார்