சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

திருகோணமலை சம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த எதிரியான பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் (11) இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு எதிராக சம்பூர் பொலிசார் வழக்கு தொடுத்திருந்தனர்.

 

குறித்த வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் (11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

 

குற்றவாளிக்கு எதிராக 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.

 

அத்துடன் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அரச சட்டத்தரணி கே. நசிகேதன் முன்னிலையாகியிருந்தார்.

 

சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சித்ரவேல் லினேஷ்கரன் அல்லது விஜிதன் (41வயது) என்ற எதிரிக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 03ம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

 

அந்தவகையில் ஒருமுறைக்காக 10 வருடங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டயீடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் நட்டயீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற தீர்ப்புகள் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு உதவும் எனவும் இதுபோன்ற கடுமையான தண்டனையை திருகோணமலை நீதிமன்றில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் புதிய அரசாங்கத்தின் காலத்தில் பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும், தண்டனைகள் அதிகரிக்கின்றபோதுதான் குற்றங்கள் குறையும் என்பதால் இதுபோன்ற தீர்புகளை வரவேற்பதாகவும் சமூக நலன் விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin