கிண்ணியா மாணவி விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா பயணம்

தி/ கிண் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி எதிர்வரும் 27 ம் திகதி இந்தியா பயணம்
விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் முயற்சியின் ஒரு கட்டமாக, Mission ShakthiSAT – Phase II (India Programme) எனும் சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விசேட பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உலகளாவிய ரீதியில் 108 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 பெண் மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் இந்தியாவில் தங்கியிருந்து குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதுடன், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், இம்மாணவிகள் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெறவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் இருந்து 20 மாணவிகள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று, தற்போது உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

மாணவி நூரியின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான சாதனைகள் பின்வருமாறு:-

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018: 164 புள்ளிகள்.

கணிதத் திறமைப் போட்டி – IRO College, 2017: தேசிய மட்டத்தில் சாம்பியன்.

சிறுவர் தடகளப் போட்டி – 2018 மற்றும் 2019: தேசிய மட்டத்தில் வெண்கலப் பதக்கம்.

விஞ்ஞான செயன்முறைப் போட்டி – 2024: மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்.

சமூக விஞ்ஞானப் போட்டி – 2023 மற்றும் 2024: மாகாண மட்டத்திற்குத் தெரிவு.

ஆங்கில தினப் போட்டி – 2026: மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்.

சதுரங்கப் போட்டி – 2026: மாகாண மட்டத்தில் சம்பியன்.

இணையத்தள உருவாக்கம்: Joomla தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தள உருவாக்கத்தில் திறமை பெற்றுள்ளார்.

கிண்ணியாவைச் சேர்ந்த மாணவிக்கு இத்தகைய அரிய சர்வதேச வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான முழுமையான அனுசரணையையும் வழங்கிய சர்வதேச செயற்பாட்டாளர்

மல்வானையைபா பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களுக்கு, தி/கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சார்பாகவும் கிண்ணியா மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.

இத்திட்டமானது இலங்கையின் விஞ்ஞான மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவின் ஒரு மாணவி சர்வதேச விண்வெளித் துறையின் இத்தகைய முக்கியமான முயற்சியில் இணைவது கிண்ணியா மக்களுக்கும், தி/கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கும் பெருமைக்குரிய விடயமாகும்.

இந்நிகழ்விற்கு பல்வேறு வகையிலும் உதவி செய்த அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நழிமி) அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: admin