அமைதியாக அரசியலை விட்டுப்போவது தான் சுமந்திரனுக்கு நல்லது – கஜேந்திரகுமார் பதிலடி

“சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம், அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவது தான் பொருத்தம்”-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலடி

சுமந்திரன் தனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் எதிர்த்தரப்புகள் தமது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளட்டும் என்று சவால் விடுத்துள்ளாரே என்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- சுமந்திரன் எனது பெயரை இழுத்து கருத்துகள் தெரிவித்திருக்கிறார். நான் அவரது பெயரை சொல்வதை கன காலமாக தவிர்த்து வந்துள்ளேன்.

எம். ஏ. சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம், அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவது தான் பொருத்தம்.

தனிநபர் சுமந்திரனைப் பற்றி சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு கிடையாது. ஆனால், உண்மை என்னவென்றால் அவரது அரசியல் மிக மோசமான அரசியலாக கடந்த பதினைந்து வருடமாக இருந்தது. பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரக்கூடிய சூழல் கடந்த 15 வருடமாக இருந்தது. அதிலிருந்து தமிழ் மக்கள் தப்பியது தெற்கில் நடந்த சில குழப்பங்களால் அவரது ஒத்துழைப்பு , தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்குரிய இணக்க அரசியல், அவர் கொடுக்கத் தயாராக இருந்தாலும் கூட சம்பந்தரும் , சுமந்திரனும் செய்வதற்கு தயாராக இருந்தாலும் கூட தெற்கிலே இருக்கக் கூடிய அரசியல் அதைக் குழப்பியது. 2015இல் மிக மோசமான ஏக்கிய இராச்சிய என்ற இடைக்கால அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலே இருந்த கருத்து வேறுபாடுகள், போட்டித் தன்மை காரணமாக அதனை ஒரு நிறைவுக்கு கொண்டு போக முடியவில்லை. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அமைப்பாக இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தார்கள்.

எழுத்து மூலமாக கூட தமது ஒப்புதலைக் கொடுத்திருந்தார்கள். இது ஒரு சிங்கள பெளத்த நாடாக மாற்றியமைக்க தாம் எதிர்ப்பல்ல என்பதை எழுத்து மூலமாக குடுத்திருந்தார்கள். மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்தி சட்டம் தெரியாத சாதாரண மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எம்மிடம் இருக்கின்றது. அதை நாம் தொடர்ந்தும் செய்வோம்.

புதிய அரசு பாராளுமன்றத் தேர்தலின் பின், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற விடயத்திலே 2015 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பின் இடைக்கால வரைபை நிறைவேற்றுவதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக அறிவித்துள்ளது.

இதன் பின்னணியில் இடைக்கால அறிக்கை தொடர்பாக ஜே. வி. பி. இடைக்கால அறிக்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது என்றால் அது எவ்வாறானதாக இருக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். மோசமான பிற்போக்கு வாத இடைக்கால அறிக்கையை தயாரித்து தமிழ் மக்களின் ஆணையோடு நிறைவேற்ற தமிழ்த் தரப்பு முண்டியடிக்கிறது.

அநுரகுமார திஸநாயக்க அழைத்தால் பேச செல்வோம். ஆனால், இடைக்கால வரைபை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச அழைத்தால் நாம் செல்லமாட்டோம்.

சமஷ்டி தொடர்பிலாக தமிழ் மக்களின் தீர்வு விடயமாக இருந்தால் நிச்சயமாக செல்வோம்.

இதனை நாம் எம்மை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் பிரதிநிதிகளிடமும் தெரிவித்துள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்கவும் எம்தை அழைத்தார் நாம் செல்லவில்லை.

இந்திய நலன் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் பற்றியும், சீனா இன்றைய சூழலில் உள்ளே நுழைந்திருப்பது பற்றியும் கஜேந்திரகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN