யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் சகாதேவன், ஊழியர்களுடன் அநாகரிகமாக செயற்படுகிறார் என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “NPP அரசே தகுதியற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறனற்ற பதில் பொது முகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய், NPP அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர், பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதியாக அநுரகுமார திஸநாயக்க பதவியேற்ற பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக செல்வின் இரேனியஸ் நியமிக்கப்பட்டார்.
அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டார்.
இவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தன.
ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் அநுரவுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்து வந்தார் என்ற ஒரு காரணத்துக்காக பனை அபிவிருத்தி சபை தலைவர் பதவி வழங்கப்பட்டமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.