இன்றைய தினம் (06.11) வியாழன் கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகளை இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல அனுமதிக்காது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியைத் தொடர பொலிசார் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
குறித்த பகுயில் மக்களின் நீண்டகால எதிர்ப்புக்கு மத்தியிலும் கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கைக்காக. அதிகாரிகள் வருகை தர இருப்பதாக அறிந்து கொண்ட இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களும் காலை 8 மணியிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து பல வாகனங்களில் அதிகாரிகள் அவ்விடத்துக்கு கனியவள மணல் அகழ்வு செய்யும் முகவருடனும் பொலிஸ் உயர் பாதுகாப்புடனும் வருகை தந்திருந்த பொழுது பொது மக்கள் பாதைகளை மறித்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல விடாது தடுத்தனர்.
இதன் போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் , அரசியல்வாதிகள் , பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் இணைந்து வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கைக்காக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்வதற்காக நீதிமன்ற அனுமதியைக் கோரியிருந்தனர்.
இன்று மாலை நீதி மன்றில் இது குறித்து விசாரணை நடைபெற்றபோது, மக்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிசாரும் தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றுள்ளதால், தொடர்ந்தும் மதீப்பீடு செய்யும் நடவடிக்கை நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்
தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் விளைவித்துள்ளது.