இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு !!
விமான நிலையத்தில் வந்திறங்கியதும் விசா பெறும் வசதி
கணினி முறைமைப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இலங்கையின் மின்னணுப் பயண அனுமதி (ETA) இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதால்,
மறுஅறிவித்தல் வரை தகுதியான வெளிநாட்டுப் பயணிகள் முன் ETA அனுமதியின்றியே இலங்கைக்கான விமானங்களில் பயணிக்க முடியும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, தகுதியுடைய பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அல்லது ஏனைய அங்கீகரிக்கப்பட்ட நுழைவாயில்களை வந்தடைந்த பின்னர்,
அங்கு வைத்து ETA அல்லது சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு
இந்தத் தற்காலிகச் சலுகை பொருந்தாது எனச் சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக நடவடிக்கையானது விசா தேவைகளை முழுமையாக ரத்துச் செய்யவில்லை என்பதைக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் அனைத்துப் பயணிகளும் வழமையான குடிவரவுச் சோதனைகள் மற்றும் தொடர்புடைய விசா விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுடன்,
நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவு குடிவரவு அதிகாரிகளையே சார்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முறைமை சீர்செய்யப்பட்டவுடன் வழமையான நடைமுறைகள் மீண்டும் அமுலுக்கு வரும் எனவும், இது குறித்துப் பயணிகளுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

