பரீட்சைகளில் சிறப்பாகச் செயற்பட உதவும் மாத்திரைகள்! இணையத்தில் உலாவும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை
பரீட்சைகளில் சிறப்பாகச் செயற்பட உதவும் மாத்திரைகள் எனக் கூறி இணையத்தில் வெளியாகும் சட்டவிரோத விளம்பரங்கள் தொடர்பில் தென்கொரிய அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தென்கொரியாவின் போதைப்பொருள் பாதுகாப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, இவ்வாறான 571 இணையப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட மொத்தப் பதிவுகளில் 553 பதிவுகள், ‘ADHD’ எனப்படும் கவனக்குறைபாட்டு நோய்க்கு உதவும் எனக் கூறி விளம்பரப்படுத்தப்பட்ட ‘மெத்தில்ஃபெனிடேட்’ (Methylphenidate) மருந்துகள் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எஞ்சிய 18 பதிவுகள், இதய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘புரோப்ரனோலோல்’ (Propranolol) மருந்துகள் குறித்தவையாகும்.
வைத்தியரின் உரிய பரிந்துரையின்றி இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்தால் பதற்றம், தலைவலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் எனச் சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர். அத்துடன், இணையத்தினூடாகச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் இவ்வாறான மருந்துகள் போலியானவையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் மாத்திரைகள் என எதுவும் கிடையாது என வலியுறுத்தியுள்ள தென்கொரிய அரசாங்கம், இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

