பிரித்தானியாளவில் வான்வெளியில் அதிர்ச்சி

பிரித்தானியாளவில் வான்வெளியில் அதிர்ச்சி – விமானத்தின் இறக்கைக்கு மிக அருகில் உரசிச் சென்ற அடையாளம் தெரியாத உலோகம்!

பிரித்தானியாளவில் வான்வெளியில் விமானத்தின் இறக்கைக்கு மிக அருகில் அடையாளம் தெரியாத உலோகம் ஒன்று உரசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம், சரே வான்வெளியில் 5,800 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

விமானத்தின் வலது இறக்கைக்கு மேலே சுமார் 50 அடி உயரத்தில், எதிர் திசையில் அதிவேகமாக உரசிச் சென்ற ஒரு பளபளப்பான வெள்ளி நிறப் பொருளை விமானிகள் கவனித்துள்ளனர்.

அப்பொருளின் அளவைக் குறிப்பிட்ட விமானி, அது தோராயமாக நான்கு டோஸ்டர்கள் அளவிலான உலோகம் போல் தோற்றமளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் வேகம் மற்றும் அந்த மர்மப் பொருள் கடந்துசென்ற குறுகிய நேரம் காரணமாக, அதன் சரியான வடிவம் மற்றும் அளவை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

உடனடியாக வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ரேடார் தரவுகளை ஆய்வு செய்தபோதிலும், அந்தப் பொருளின் நடமாட்டம் ரேடாரில் பதிவாகவில்லை.

இதனால் மின்னணு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத சூழலில், அந்த மர்மப் பொருளின் அடையாளம் அல்லது அது எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இங்கிலாந்தின் ஏர்ப்ராக்ஸ் வாரியம் இந்தச் சம்பவத்தை ஆய்வு செய்து, விபத்து அபாயம் மிக அதிகம் கொண்ட மிக தீவிரமான ‘கேட்டகரி ஏ பிரிவில் சேர்த்துள்ளது.

இலையுதிர்காலப் பாதுகாப்பு ஆய்வில் பரிசீலிக்கப்பட்ட 13 வான்வெளி நிகழ்வுகளில், மிக உயர்ந்த அபாயக் குறியீடு அளிக்கப்பட்ட ஒரே சம்பவம் இதுவேயாகும்.

எனினும், அதிர்ஷ்டவசமாக விமானி அவசர கால நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; விமானம் திட்டமிட்டபடி தனது பயணத்தை எவ்விதப் பாதிப்புமின்றி நிறைவு செய்தது.

தெற்கு இங்கிலாந்தின் பரபரப்பான வான்வெளியில் அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் ட்ரோன்களால் தொடர்ந்து ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த கவலையை இந்த நிகழ்வு மீண்டும் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin