4,700 கோடி ரூபாய் நிவாரண பிரேரணைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம்!

4,700 கோடி ரூபாய் நிவாரண பிரேரணைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம்!

எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட 4,700 கோடி ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணைக்கு பாராளுமன்றம் இன்று(04) அனுமதி வழங்கியுள்ளது.

 

இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 

இதன்படி, மொத்த நிதியில் 4,100 கோடி ரூபாய் எரிசக்தி அமைச்சின் செலவுத் தலைப்பின் கீழும், 600 கோடி ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

 

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமையால் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக, 4,100 கோடி ரூபாய் நிதி ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

 

அத்துடன், அஸ்வெசும திட்டத்தின் கீழ் மிகவும் வறிய பிரிவினருக்கு 6,250 ரூபாயும், வறிய பிரிவினருக்கு 4,000 ரூபாயும் மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மிகவும் வறிய பிரிவினருக்கான 6,250 ரூபாய் கொடுப்பனவு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்றும், இது ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவு என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டுக்காக மேலதிக செலவினங்கள் எதுவும் ஏற்படாது எனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியை ஏனைய துறைகளிலிருந்து முகாமைத்துவம் செய்து தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin