மாதச் சம்பளம் ரூ.1.4 இலட்சம்; வாகனக் குத்தகை ரூ.1.32 இலட்சம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

மாதச் சம்பளம் ரூ.1.4 இலட்சம்; வாகனக் குத்தகை ரூ.1.32 இலட்சம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதற்கான குத்தகைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

பிரதம பொலிஸ் பரிசோதகரான வருணி போகஹவத்த என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கடந்த செவ்வாய்க்கிழமை (3) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய அவரிடம் இருந்த சொகுசு வாகனம் ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மையில் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

 

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கட்டணங்களைச் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மாதாந்த சம்பளம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும், வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கட்டணம் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், குறித்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் குத்தகைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் உண்மையான மூலம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin