273 பயணிகளுடன் இலங்கை வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பரபரப்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து 258 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் கட்டுநாயக்க நோக்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏர்பஸ் A-330 விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.38 மணியளவில் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விமானத்தின் சரக்குப் பகுதியில் புகை எச்சரிக்கை எழுந்ததால் நடுவானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
உடனடியாக விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
விமானியின் திறமையான செயல்பாட்டால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.
தரையிறக்கத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், விமானத்தில் கொண்டு வரப்பட்ட இறைச்சிப் பொதிக்காகப் பயன்படுத்தப்பட்ட நைட்ரஜன் உலர் பனியிலிருந்தே இந்தச் புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
உலர் பனியால் உருவான புகை காரணமாகவே ஆபத்து எச்சரிக்கை மணி ஒலித்துள்ளதாகவும், விமானத்திற்கு வேறு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலதிகப் பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று காலை தனது அடுத்தகட்ட பயண இலக்கை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

