மாவடிப்பள்ளியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் மஜீனாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது.

மாவடிப்பள்ளியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் மஜீனாவுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அரச விருதான இளங்கலைஞர் விருது – 2026 மாவடிப்பள்ளியைச் சேர்ந்த இளம் எழுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான U.L.U. மஜீனாவுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மஜீனா, கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், பாடலாக்கம், கட்டுரை மற்றும் ஊடகத்துறை எனப் பல்வேறு தளங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். இலக்கியத்தின் ஊடாக சமூக அக்கறை, தன்னம்பிக்கை, பெண்களின் முன்னேற்றம் மற்றும் மனிதநேயச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வரும் இவர், இளம் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்கின்றார்.

 

இலங்கையின் முன்னணி நாளிதழான தினகரன் பத்திரிகையின் செந்தூரம் பகுதியிலும், இந்தியாவின் விடியல் இலக்கிய இதழிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்தியுள்ள இவர், இதுவரை 58-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பெண் ஆளுமைகளின் நேர்காணல்களைத் தினகரன் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

 

சாதனை படைக்கும் பெண்களின் அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த சவால்களையும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும், கட்டார் நாட்டிலிருந்து வெளிவரும் துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், இந்தியாவின் சென்னையிலிருந்து வெளிவரும் மணிமகுடம் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். இலங்கை மற்றும் சர்வதேச இதழ்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

 

தேசிய இலக்கிய விழாக்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று, பாடலாக்கம், சிறுவர் கதை, சிறுகதை, கவிதை மற்றும் புதுக்கவிதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்றுள்ள மஜீனா, 2021ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கலைஞர் சுவதம் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

 

அத்துடன், 2026ஆம் ஆண்டு Mutur JMI EXPO விருது விழாவில் இளம் எழுத்தாளர் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இவரது இலக்கியப் படைப்புகள் சமூக நல்லிணக்கம், குடும்ப அன்பு, தன்னம்பிக்கை மற்றும் பெண்களின் ஆளுமை வளர்ச்சி போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன.

 

எழுத்தின் ஊடாக சமூகத்திற்குப் பயனுள்ள கருத்துக்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயற்பட்டு வரும் இவர், எதிர்காலத்தில் தனது படைப்புகளை நூல்களாக வெளியிடுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

 

இளம் வயதிலேயே இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் மேற்கொண்டு வரும் பங்களிப்புகளுக்காக அரச மட்டத்தில் கிடைத்துள்ள இவ்விருது, மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin