பிரித்தானியாவில் சட்டவிரோதமாக சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்த இந்தியர் கைது!!
தப்பியோட முயன்றபோது குடிவரவு பிரிவினரிடம் சிக்கினார்!
பிரித்தானியாவின் ரொம்போர்ட் (Romford) பகுதியிலுள்ள சிகையலங்கார நிலையம் (barbershop) ஒன்றில்
சட்டவிரோதமாகப் பணியாற்றிய குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜை ஒருவர் குடிவரவு அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சுரண்டல் இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குடிவரவு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றனர்.
அதிகாரிகள் அங்கு நுழைந்த வேளையில், குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் பின்புற வழியாக தப்பி ஓட முற்பட்டுள்ளார். எனினும், அதிகாரிகளால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் தனது வருகைக்கான விசா (Visit Visa) நிபந்தனைகளை மீறி அங்கு சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
சட்டப்பூர்வ வேலை அனுமதி அற்ற நபரை பணியில் அமர்த்தியமைக்காக, குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு சிவில் அபராதம் (Civil Penalty) விதிக்கப்படலாம் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் சட்டவிரோத வேலைவாய்ப்புகளுக்கு எதிரான சோதனைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 2024 முதல் முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனைகளில், இதுவரை 17,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

