கத்தாரில் உலக முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்!

கத்தாரில் உலக முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்!

ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பினால் (UNCTAD) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு (9th World Investment Forum 2026), ஒக்டோபர் 25 முதல் 27ஆம் திகதி வரை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறுகின்றது. இம்மாநாடு உலக நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகத் துறைப் பிரதிநிதிகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கின்றது.

 

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘இலங்கை சுற்றுலாத்துறை 2026: நிலையான முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான விசேட அமர்வு ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வமர்வில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி, நிலையான சுற்றுலா அபிவிருத்தி மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

 

இலங்கையின் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் சுரங்க லியனபத்திரண ஆகியோர் இவ்வமர்வில் உரையாற்றவுள்ளனர்.

 

குறிப்பாக, கற்பிட்டி பகுதியில் ஆடம்பரத் தீவு விடுதிகளை உருவாக்குதல், தெத்துவ பகுதியில் சூழலியல் மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை மேம்படுத்துதல், கிழக்குக் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட வாய்ப்புகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

 

மேலும், 100 சதவீத வெளிநாட்டு உரிமையுடன் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் விரைவான அனுமதி நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்களும் இம்முன்மொழிவுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

இதன் மூலம் இலங்கையை நிலையான, உயர்தர சுற்றுலா முதலீடுகளுக்கான முக்கிய இடமாக நிலைநிறுத்துவதுடன், சர்வதேச முதலீடுகளை ஈர்த்து நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதே எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin